ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலடி தந்தது இலங்கை ; அபார ரன் துரத்தல்!

0
119
Sl vs Afg

நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சுற்று போட்டிகள் முடிவடைந்து இரண்டாம் சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் முன்னேறி இருக்கின்றன!

இன்று சார்ஜா மைதானத்தில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சனகா இலங்கை அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் தர களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் எண்ணத்துடன் பேட்டிங் செய்தார்கள். ஆடுகளமும் பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரகமனுல்லாஹ் குர்பாஸ் மிகச் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 84 ரன்கள் குவித்தார்.

இவருக்கு பக்கபலமாக விளையாடிய இப்ராஹிம் ஸட்ரன் 38 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 175 ரன்களை எடுத்தது. கடைசி 3 ஓவர்களில் இன்னும் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் ஆப்கானிஸ்தான் அணியின் ரன்கள் அதிகரித்திருக்கலாம். இலங்கை அணியின் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மதுசங்கா 4 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் தந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பவர் பிளே முதல் 6 ஓவரில் 57 ரன்கள் எடுத்து அருமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பதும் நிசாங்கா 35 ரன்களும், குசால் மெண்டிஸ் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய விளையாடிய குணதிலக 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இலங்கை அணியின் பக்கம் வெற்றி முகம் காட்ட தொடங்கியது. நேரத்தில் இடையில் களமிறங்கிய பனுக ராஜபக்சே அதிரடியில் மிரட்டினார். 14 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சரோடு அவர் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்கும் பொழுது இலங்கை அணி 99% வெற்றியை எட்டி விட்டது.

இலங்கை அணி இறுதியாக 19.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் முதல் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு தற்போது பதிலடி கொடுத்து இருக்கிறது இலங்கை அணி. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் நாளை மிகப்பெரிய போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது!