இனிமேல் இந்த வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாது – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு

0
941
Srilanka Cricket Board

உலக கிரிக்கெட்டின் தலை சிறந்த அணிகளுள் ஒன்று நமது அண்டை நாடான இலங்கை அணி. சிறிய அணியாக முதலில் வலம் வந்த இந்த அணி 1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றி பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. அதிலிருந்து அந்த அணியின் போக்கே மாறியது. மிகவும் சிறிய அணி என்று வர்ணிக்கப்பட்ட அந்த அணி உலக கோப்பை வெற்றிக்குப் பின்பு பல பெரிய அணிகளை வீழ்த்தி சாதனை புரிந்தது. அதற்கு முக்கிய பங்கு அந்த அணியின் கேப்டன் ரணதுங்காவையே சேரும். யாரும் எதிர்பாராத வண்ணம் உலக கோப்பை தொடரில் ஜெயசூர்யாவை துவக்க வீரராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சொன்னவர் இவர் தான். இதன் பிறகுதான் உலக கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா கிடைத்தார்.

இதன் பின்பு பல உலக கோப்பை தொடர்களில் இந்த அணி இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. குறிப்பாக 2007 மற்றும் 2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடர்களில் வரிசையாக இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு இந்த அணி தகுதி பெற்றது. 2014 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரை வெற்றிகரமாக இந்த அணி கைப்பற்றியது. ஆனால் சங்ககாரா, ஜெயவர்தனா, மலிங்கா போன்ற சீனியர் வீரர்கள் எல்லாம் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு இந்த அணியின் நிலை தலைகீழாக மாறத் தொடங்கியது. மேத்யூஸ் போன்ற வீரர்களும் காயத்தால் தொடர்ந்து அவதியுற வரிசையாக தோல்விகளை பதிவு செய்து கொண்டே வந்தது இலங்கை அணி. ஒரு கட்டத்தில் உலக கோப்பை வென்று அசத்திய இலங்கை அணி தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதிச்சுற்று விளையாடி அடுத்த சுற்றுக்குத் வந்தது.

- Advertisement -

இப்படி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை அணிக்கு தற்போது ஒரு புதிய விதியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. சரியான உடற் தகுதியை வீரர்கள் நிரூபிக்கத் தவறினால் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் கணிசமான தொகை குறைக்கப்படும் என்று அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் கிரிக்கெட் மீண்டும் எழுச்சி பெறும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.