25 வருட காலத்தில் என்னுடைய கிரிக்கெட் தருணங்களை நான் கடைசிவரை நினைவில் வைத்திருப்பேன் – கனத்த இதயத்துடன் ஓய்வுபெற்ற ஸ்ரீசாந்த்

0
138
S Sreesanth

தற்போது உள்ள இளம் இந்திய ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கேரளாவில் பிறந்த ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சாளராவார். இந்திய அணிக்கு சர்வதேச டி20 போட்டியில், கேரளாவில் இருந்து வந்து விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

2005 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக சுமார் 6 ஆண்டு காலம் சர்வதேச போட்டிகளில் ஸ்ரீசாந்த் விளையாடி இருக்கிறார். 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுக்கள், 10 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் என சர்வதேச அளவில் இந்திய அணிக்காக கைப்பற்றியிருக்கிறார்.

ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ விதித்த தடை

ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2010 வரையில் பஞ்சாப் அணியிலும் 2012ஆம் ஆண்டு கொச்சி அணியிலும் விளையாடினார். பின்னர் 2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இவர் விளையாடினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் சம்பந்தமாக இவர் மீது புகார் எழுந்தது. அதன் காரணமாக கிரிக்கெட் போட்டியில் விளையாட இவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இவருக்கு தடைவிதிக்கப்பட்ட காலகட்டத்தில் பல திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்கள் என ஒரு வலம் வந்தார். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 12-வது பிக் பாஸ் சீசனின் ரன்னர் அப் பட்டத்தை இவர் வென்றது குறிப்பிடத்தக்கது. இடையே அரசியலிலும் இவர் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

பின்னர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் மீதான தடை நீக்கப்பட்டது. மீண்டும் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீசாந்த் முன்புபோல பங்கேற்கலாம் என்று பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது.

மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்

இவர் மீதான தடை நீக்கப்பட்டது கேரள கிரிக்கெட் அணி நிர்வாகம் இவரை 2021 ஆம் ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அழி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் விளையாட அழைத்தது. இவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் முதல் முறையாக சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் களமிறங்கி விளையாடினார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இவர் முக்கிய காரணமாக பங்காற்றினார். அந்த போட்டியில் மிக சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை ( ஃபைவ் விக்கெட் ஹால் ) இவர் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி 2007(டி20) மற்றும் 2011(50 ஓவர்) ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக இவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கனத்த இதயத்துடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீசாந்த் “இன்று மிகவும் கடினமான நாளாக உணர்கிறேன். கேரளா அணைக்காக லீக் மற்றும் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது பின்னர் பிசிசிஐ சார்பாக இந்திய அணியில் விளையாடியது, வார்விக்ஷிரே அணிக்கு விளையாடியது என இந்த 25 வருட காலத்தில் என்னுடைய கிரிக்கெட் தருணங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

கனத்த இதயத்துடன் இதை நான் தெரிவிக்கின்றேன் நான் இன்றுடன் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன் என்று பதிவிட்டிருந்தார். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாக வேண்டும் அதை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த முடிவு இப்பொழுது எடுப்பது சரி என்ற காரணத்தினால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.