கடைசி ஓவரில் நோ பால் வீசி அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி ; சவுத் ஆப்ரிக்கா வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ்க்கு லாபம் – வீடியோ இணைப்பு

0
141
IND W vs SA W 2022 CWC

பத்த ஐ.பி.எல் போட்டிகளுக்கு இணையான ஒரு ஆட்டமாக, நியூசிலாந்தில் தற்போது பெண்கள் உலகக்கோப்பையில் இந்தியா தென்-ஆப்பிரிக்கா இடையே நடந்து முடிந்துள்ள ஆட்டம் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் 2019 ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் திருப்பங்களுக்குச் சமமான போட்டி இது.

புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்க, தென்-ஆப்பிரிக்கா 9 புள்ளிகளோடும், இங்கிலாந்து 8 புள்ளிகளோடும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. வெஸ்ட்-இன்டிஸ் 7 புள்ளிகளோடு, இந்தியா தென்-ஆப்பிரிக்கா இடையேயான போட்டியின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

- Advertisement -

இந்திய அணி வென்றே ஆகவேண்டிய இந்தப் போட்டியில், கேப்டன் மிதாலி ராஜ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ய, ஓபனர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா இருவரும் அரைசதமடித்து, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்களை தந்தனர். அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜீம் அரைசதமடிக்க, ஹர்மன் ப்ரீத் கவுர் 48 ரன்கள் அடித்தார். ஆனால் 40 ஓவர்களில் 223/3 என்றிருந்த இந்திய அணி மேற்கொண்டு 51 ரன்கள் மட்டுமே எடுத்தது. 300 ரன்களை எட்டும் நிலையிலிருந்து குறைவாய் 25 ரன்கள் எடுத்தது ஏமாற்றமே!

பின்பு களமிறங்கிய தென்-ஆப்பிரிக்கா முதல் விக்கெட்டை சீக்கிரம் இழந்தாலும், வால்வோர்-குட்ஆல் ஜோடி 125 ரன்களை அடித்து பலமான அடித்தளம் அமைத்தனர். இவர்கள் இருவரையும் ஹர்மன்ப்ரீத் கவுர் வெளியேற்றவே மீண்டும் இந்திய அணி ஆட்டத்திற்குள் வந்தது. ஆனால் ஒருபுறத்தில் லூஸ், காப் சராசரியான பங்களிப்பைத் தந்து ஆட்டமிழக்க, டியு-ப்ரீஸ் நங்கூரமிட்டதோடு அதிரடியாகவும் ஆடினார். இப்போது தென்-ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி பத்து ஓவர்களில் 76 ரன்கள் தேவை. டியு-பிரீஸின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என வந்து நிற்கிறது. இங்குதான் ஆரம்பிக்கிறது ஆட்டத்தின் திக் திக் திக் நிமிடங்கள்.

ஆறு பந்து ஏழு ரன் என்ற நிலையில் இறுதி ஓவரை தீப்தி ஷர்மா வீச, திரிஷா ரெட்டி 1 ரன் எடுக்கிறார். இரண்டாவது பந்தில் டியு-பிரீஸ் 2 ரன் எடுக்க முயற்சிக்க, த்ரிஷா ஷெட்டி கவுரால் ரன்-அவுட் ஆக்கப்படுகிறார். அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு ரன்கள் வர, இப்போது வெற்றிக்கு 2 பந்தில் 4 ரன்கள் தேவை. டியு-பிரீஸ் ஐந்தாவது பந்தை தூக்கியடிக்க கேட்ச் ஆட்டமிழக்கிறார். இந்திய அணி வீராங்கனைகள், இந்திய டிரஸ்ஸிங் ரூம், இந்திய இரசிகர்கள் என இந்தியத் தரப்பில் கொண்டாட்டங்கள் களைக்கட்டுகிறது. அப்பொழுதுதான் அம்பயர் அது நோ-பால் என இடியை இறக்குகிறார். அடுத்தடுத்த பந்துகளில் இரு ரன் எடுத்து தென்-ஆப்பிரிக்க வெல்ல, இந்திய அணி சோகமாய் உலகக்கோப்பைத் தொடரைவிட்டு வெளியேறியது!

- Advertisement -

இந்த ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் முடிவுக்காய் பார்த்துக்கொண்டிருந்த வெஸ்ட்-இன்டிஸ் அணி வீராங்கனைகள் துள்ளிக்குதித்து கொண்டாடும் வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.

முடிவு பாதகமாய் அமைந்தாலும் இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்திய போராட்டக்குணம் மெச்சத்தக்கது. நாடு திரும்பும் நம் வீராங்கனைகளை வாழ்த்தியே வரவேற்போம்!