நான் இந்த ஐ.பி.எல் அணியில் விளையாட மிகவும் ஆசைப்படுகிறேன் – யு-19 குட்டி ஏ.பி.டி பிரேவிஸ்

0
149
Dewald Brevis

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை தொடரில் அனைவரின் கண்ணும் தேவால்ட் பிரேவிஸ் மேல் தான் உள்ளது. 18 வயதான தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான இவர், முன்னாள் தென்னாபிரிக்க வீரரான ஏபி டிவில்லியர்ஸ் போன்று விளையாடி வருகிறார். அவருடைய ஸ்டைலில் விளையாடுவது மட்டுமல்லாமல், அவர் விளையாடும் சில ஷாட்களை அப்படியே எந்தவித சிரமமுமின்றி பிரதிபலித்து விளையாடி வருகிறார்.

அண்டர் 19 உலக கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 362 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி 11 சிக்ஸர்கள் மற்றும் 33 பவுண்டரிகள் அடித்து அந்தப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

இவரிடம் இருக்கும் இன்னொரு தனிச்சிறப்பு பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் மிக அற்புதமாக செயல்பட கூடிய திறமையும் இவருக்கு உள்ளது.4 போட்டிகளில் கிட்டத்தட்ட 21 ஓவர்கள் வீசி
மொத்தமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருடைய பவுலிங் எக்கானமி 5.45 என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள்

மிக சிறந்த இளம் கிரிக்கெட் வீரரான இவர் நிச்சயமாக அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளது. இவரை எந்த அணி வாங்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தற்போது அனைத்து ரசிகர்களும் உள்ளனர்.

ஆனால் இவருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடவே ஆசை உள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள அவர், “கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் எனக்கு விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இவர்கள் இருவரையும் மிக மிக பிடிக்கும் என்றும், ஐபிஎல் தொடரில் அவர்கள் இருவரும் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய காரணத்தினால் தானும் அந்த அணியில் விளையாட ஆசைப்படுவதாக தேவால்ட் பிரேவிஸ் தற்பொழுது கூறியுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் நிலையில், தேவால்ட் பிரேவிஸ் இவ்வாறு கூறியது பெங்களூர் அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் இறுதியில் எந்த அணி இவரை கைப்பற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.