ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் பிரவீஸ் 22 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி கெய்ர்ன்ஸ் நகரில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் எய்டன் மார்க்கரம் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க, ரியான் ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து, மூன்றாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரிட்டோரியஸ் மற்றும் சிஎஸ்கே வீரரான பிரவீஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
19 வயது வீரரான பிரிட்டோரியஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் பிரவீஸ் 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ஹார்டி வீசிய ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் பிரவீஸ் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை விளாசினார். இந்த நான்கு சிக்ஸர்களும் தோனியின் ஸ்டைலில் பந்து எங்கே செல்கிறது என்று பார்க்காமல் நான்கு சிக்சர் ஷாட்களை அவர் அடித்தார்.
இதன் மூலம் 22 பந்துகளில் பிரவீஸ் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது டி20 போட்டியில் ஏற்கனவே 41 பந்துகளில் சதம் அடித்த பிரவீஸ் இம்முறையும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சராசரி வைத்திருக்கக்கூடிய தென்னாபிரிக்கா வீரர் என்ற பெருமையை பிரவீஸ் பெற்று இருக்கிறார். 5 இன்னிங்ஸ் விளையாடிய பிரவீஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 46.25 என்ற சராசரியை வைத்திருக்கின்றார்.
இதையும் படிங்க: அப்ரிடி என்ன நாய் கறி சாப்பிட்டாரா? இப்படி குலைக்கிறார்? பங்கமாக கலாய்த்த இர்பான் பதான்
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக அரை சதம் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர்கள் பட்டியலில் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, குயிண்டன் டி காக், டேவிட் மில்லர், ஏய்டன் மார்க்கரம் உள்ளிட்ட வீரர்களை பின்னுக்கு தள்ளி அசத்தியிருக்கின்றார். பிரவீஸ் அதிரடி ஆட்டத்தால் தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.