விராட் கோலி எப்போது ஃபார்முக்கு வருவார் ? பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து

0
139
Sourav Ganguly about Virat Kohli

இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டிலும் கடந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த வீரர், இந்திய கிரிக்கெட்டின் ரன் மெசின் விராட் கோலி. கோவிட் காலத்தில் 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு அவரது பேட்டிங்கில் உண்டான சரிவு, மெல்ல மெல்ல அதிகரித்து மோசமடைந்தது. விராட் கோலியும் சரிவை ஈடுகட்ட, கிரீஸில் நிற்பதில் வரை மாற்றங்கள் செய்கிறார், தைரியமாய் ஷாட்ஸ்கள் ஆடுகிறார், ஆனால் அவரே எதிர்பார்க்காத விதமாய் ஆட்டமிழப்பது மட்டும் மாறவில்லை!

கடந்த ஆண்டு யு.இ.ஏ-யில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றோடு வெளியேறியதில் இருந்து, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணுகுமுறை பேட்டிங்கில் தைரியமானதாய் மாறி இருக்கிறது. மேலும் நிறைய புது வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய கவலையான விசயமாகத் தற்போது இருப்பது விராட் கோலியின் பேட்டிங் பார்ம்தான். ஏனென்றால் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு கடந்த 12-13 வருடங்களில் மிகப்பெரிய பங்களிப்பை பேட்டிங்கில் அளித்திருக்கிறார். தற்போது இந்த வெற்றிடத்தை அவரே மீண்டும் நிரப்புவாரா இல்லை யாரை வைத்து நிரப்புவது என்று இந்திய அணி நிர்வாகம் குழப்பத்தில் இருக்கிறது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து விராட் கோலியின் பேட்டில் இருந்து சதங்கள் வராவிட்டாலும், சராசரியாக ரன்களும், அரைசதங்களும் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில்தான் அவரது பேட்டிங் பார்ம் மிகவும் சரிந்து போனது. 16 போட்டிகளில் 341 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் இங்கிலாந்தில் சமீபத்தில் இங்கிலாந்துடன் நடந்த டி20 போட்டியில் இரு போட்டிகளிலும் 12 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டியிலும் காயத்தால் பங்கேற்கவில்லை. வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான சரியான காரணங்களும் சொல்லப்படவில்லை.

தற்போது விராட் கோலியின் பேட்டிங் பார்ம் பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி பேசி இருக்கிறார். அதில் அவர் “சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எண்களையும் தரத்தையும் பாருங்கள், இதெல்லாம் திறமையும் தகுதியும் இல்லாமல் நடந்துவிடாது. அவர் ஒரு கடினமான நேரத்தை அனுபவித்தார். அது அவருக்கும் தெரியும். ஆனால் அவர் மீண்டும் வந்து சிறப்பாகச் செயல்படுவதாய் காண்கிறேன். அவர் தனக்கான வழியைக் கண்டுபிடித்து வெளியே வந்து வெற்றிபெற வேண்டும். கடந்த 12-13 ஆண்டுகளாக அவர் செய்துள்ளதை அவரால் மட்டுமே செய்ய முடியும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய சவுரவ் கங்குலி “இது விளையாட்டில் சகஜமானது. இது எல்லாருக்கும் நடக்கக் கூடியது. சச்சின், ராகுலுக்கு நடந்தது. எனக்கும் நடந்தது. இதுதான் விராட் கோலிக்கும் நடந்தது. இது கிரிக்கெட் விளையாட்டின் ஒரு அங்கம். ஒரு விளையாட்டு வீரரா என்ன நடந்தது என்று ஆராய்ந்து, அதைச் சரிசெய்து, நாம் நம் வழியில் விளையாட வேண்டும் என்று கருதுகிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.