ஒரு சில முறை நான் கூறும் அறிவுரைகளை கேப்டன் டு பிளசிஸ் கேட்கமாட்டார் – விராட் கோஹ்லி

0
98
Faf du Plessis and Virat Kohli

ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் அணிகளுக்கு இணையான இரசிக பட்டாளத்தோடு, ஒருமுறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லாத ஒரு அணி இருப்பது சாதாரண விசயமில்லை. ஐ.பி.எல் தொடரில் அந்த அணியின் வீரர்கள் இரசிகர்கள் மறக்கவே முடியாத பல போட்டிகளை ஆடிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்த அணி எதுவென்றால் ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான். ராகுல் டிராவிட், கும்ப்ளேவில் ஆரம்பித்து, டேல் ஸ்டெயின், மிட்ச்செல் ஸ்டார்க் என்று பிரபல வேகங்கள் வரிசைக்கட்ட, கிறிஸ் கெயில், ஏ.பி.டிவிலியர்ஸ் போன்ற அதிரடி சூரர்களையும், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலியையும் கண்ட அணி அது!

பல அசாத்தியமான வீரர்களை வைத்து அசாத்தியமான ஆட்டங்களைத் தந்திருக்கும் பெங்களூர் அணிக்கு ஐ.பி.எல் கோப்பை என்பது கனவாகத்தான் இருந்து வருகிறது. இதை இந்த முறை மாற்றும் விதமான, நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சில அதிரடி மாற்றங்களை பெங்களூர் அணி செய்திருந்தது. அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹலை கழட்டி விட்டது. விராட்கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நகர்ந்து கொண்டார். ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத மாதிரி தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் 37 வயதான பாஃப் டூ பிளிசிஸை வாங்கியதோடு கேப்டனாகவும் அறிவித்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இனி வாய்ப்பில்லை என்ற நிலையிலிருந்த பாஃப் டூ பிளிஸிசின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பேட்டிங் பார்ம் இப்பொழுதும் மிகச்சிறப்பாகத்தான் இருக்கிறது. பெங்களூர் அணியை ஒரு கேப்டனாக வழிநடத்துவதோடு, அவரது பேட்டிங்கும் பெரியளவில் அதிரடியாய் மாறியும் உள்ளது. கடந்த சீசன் சென்னை அணிக்காக 600+ ரன்களை குவித்து, சென்னை சாம்பியன் பட்டம் வெல்ல ஒரு முக்கியக் காரணமாய் இருந்தார். தற்போது புள்ளி பட்டியலில் பதினான்கு புள்ளிகளோடு நான்காம் இடத்தில் இருக்கிறது.

பெங்களூர் அணி முன்னாள் கேப்டன் விராட்கோலி பாஃப் டூ பிளிசிஸ் பற்றி சில சுவாரசியமான கருத்துக்களைச் சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது, “இந்த சீசனில் நாங்கள் ஒன்றாக விளையாடுவதற்கு முன்பே நன்றாக பழகி இருந்தோம். ஏனென்றால் அவர் சிறிது காலம் செளத்ஆப்பிரிக்காவின் கேப்டனாக இருந்தார். அப்போது நாங்கள் பேசி இருக்கிறோம். அவர் தன்னை எப்போதும் நம்பும் ஒரு வீரர். நான் சில நேரங்களில் சில விசயங்களைக் கூறுவேன். ஆனால் அவர் சிலதை மறுத்து விடுவார். அதனாலே எனக்கு அவர் மீது அதிக மரியாதை உண்டு. முழு முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. அதை அவர் சரியாகச் செய்வார். அவர் புத்திசாலியான நபர், மேலும் பார்ப்பதற்கு அழகான தோற்றமுடைய நபர்” என்று கூறினார்!