“விராட் கோலியோட டைம் முடிஞ்சிபோச்சுன்னு சொன்னவங்க, இப்போ வெற்றிக்கு டான்ஸ் ஆடுறாங்க…” அதாம்ல கிங் கோலி! – கோலியின் பேட்டிங்கை புகழ்ந்த எதிரணி வீரர்!

0
2332

கோலியை விமர்சித்தவர்கள் இப்போது இந்த வெற்றிக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று விராட் கோலியின் பேட்டிங்கை புகழ்ந்துள்ளார் தென்னாப்பிரிக்க வீரர் ஷம்ஷி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்ததால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தனது 71வது சதத்தையும், முதலாவது t20 சதத்தையும் ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடித்தார். 

அதன் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் நடந்த டி20 தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். சதம் அடிப்பதற்கு முன்னர் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார். 

‘இதற்கு மேல் விராட் கோலி இந்திய அணியில் இருப்பதற்கு பயனில்லை. இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.’ என்றும் பலர் விமர்சனங்களை முன் வைத்தனர். பல்வேறு மன அழுத்தங்களை தாங்கிக் கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது பழைய பார்மிற்கு வந்திருக்கும் விராத் கோலி, மீண்டும் ஒருமுறை தான் யார் என்பதை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிரூபித்திருக்கிறார்.

நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில், இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் கடைசி வரை நின்று 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். தற்போது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் பல்வேறு அணிகளின் வீரர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் சம்ஸி விராட் கோலியின் பேட்டிங்கை ட்விட்டர் பதிவின் மூலம் புகழ்ந்திருக்கிறார்

“சிலர் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விமர்சித்தார்கள். அவர்கள் கூறி நீண்ட நாட்கள் ஒன்றும் ஆகவில்லை. ஆனால் அவர்கள் தற்போது விராட் கோலி பெற்று தந்த வெற்றிக்கு டான்ஸ் ஆடுகிறார்கள். கடந்த காலங்களில் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்காக விடாமல் போராடி வெற்றி பெற்றுத் தந்த வீரரை, சமீப காலமாக சரியாக விளையாடவில்லை என்பதற்காக கீழே தள்ளிவிடாமல் எப்படி பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்.” என பதிவிட்டிருந்தார்.