“அவர் அடித்த சில ஷாட்கள் நான் இதுவரை பார்க்காதது!” – சூர்யா பற்றி வில்லியம்சன் வியப்பு!

0
25986
Williamson

இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த டி20 தொடருக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார்!

இந்த நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் இசான் கிசான் 36 ரன்கள் எடுக்க, இறுதிவரை களத்தில் நின்று 51 பந்துகளை சந்தித்த சூரியகுமார் யாதவ் 11 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் தீபக் ஹூடா 2.5 ஓவர்கள் பந்து வீசி 10 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தோல்விக்கு பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்
” இது எங்களின் சிறந்த செயல் திறன் கிடையாது. சூரியகுமார் யாதவின் இன்னிங்ஸ் இந்த உலகத்திற்கு வெளியே இருந்தது. இது சிறந்த ஆட்டங்களில் ஒன்று. அவர் அடித்த சில ஷாட்கள் நான் இதற்கு முன் பார்க்காதது” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாங்கள் குறிவைக்கும் அளவிற்கு அவர்கள் இல்லை. அவர்கள் சிறப்பானவர்கள். எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இல்லை நாங்கள் விக்கட்டுகளை பெறவில்லை. நாங்கள் பேட்டிங் செய்கையிலும் நல்ல வேகம் இல்லை. இது மிகவும் வெறுப்பான ஒரு விஷயம். நான் மீண்டும் சொல்கிறேன் சூரிய குமாரின் இன்னிங்ஸ் அபாரமானது அதுதான் பெரிய வித்தியாசத்தை உண்டாக்கி விட்டது. நாங்கள் ஆட்டத்தின் சில இடங்களில் பெரிய தவறுகளை செய்தோம் அதை நாங்கள் சரி செய்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.