“சீரியஸுக்கு சீரிஸ் ரெக்கார்ட் பண்ணும் சூரியகுமார்” 2022ல் இரண்டாவது தொடர்நாயகன் விருது…! விராட்கோலி, புவி சாதனைகள் சமன்!

0
616

2022ல் இரண்டாவது தொடர் நாயகன் விருது பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறார் சூரியாகுமார் யாதவ்.

இந்திய டி20 அணிக்கு நம்பர் 4 இடத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூரியகுமார் யாதவ். 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு கனவு ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 23 டி20 போட்டிகளில் ஆறு அரைசதங்கள், ஒரு சதம் உட்பட 801 ரன்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 117 ரன்கள் விளாசி டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்திய அணிக்காக முதல் இடத்தில் இருந்து ஆறாவது இடம் வரை மாறிமாறி களம் இறங்கி வந்த இவருக்கு, சமீபகாலமாக நான்காவது இடம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலககோப்பைக்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டார். அதற்கு முன்னர் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் அபாரமாக செயல்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றார். அதன் பிறகு தற்போது நடந்து முடிந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக இத்தொடரில் தொடர் நாயகன் விருது இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஒரு கிரிக்கெட் ஆண்டில் இரண்டு முறை டி20 தொடர்களில் தொடர் நாயகன் விருது பெரும் மூன்றாவது இந்திய வீரர் ஆகிறார் சூரியகுமார் யாதவ்.

இதற்கு முன்னர் புவனேஸ்வர் குமார், இதே 2022ம் ஆண்டில் இரண்டு முறை தொடர் நாயகன் விருது பெற்றார். விராட் கோலி 2014 ஆம் ஆண்டு இரண்டு முறை டி20 தொடர்களில் தொடர் நாயகன் விருது பெற்றார். தற்போது இந்த வரிசையில் சூரியகுமார் யாதவ் இணைந்திருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடரில், இவர் மீது இந்திய அணி நிர்வாகம் அதீத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. ஏனெனில் பவர்-பிளே ஓவர்களில் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டம் இழந்துவிட்டால், அதன் பிறகு இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு இவரது அதிரடி தொடர்ச்சியாக உதவி வருகிறது. இதன் அடிப்படையில் மிகப்பெரிய தொடரிலும் இவரது பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.