சூரியகுமார் பேயாட்டம்; நாங்க யாருன்னு காட்டிய இந்தியா.. 229 ரன்கள் இலக்கு!

0
247

3வது டி20ல் சதமடித்தார் சூரியகுமார் யாதவ். இலங்கை அணிக்கு 229 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் இஷான் கிஷன் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். முதல் இரண்டு டி20 போட்டிகளில் சொதப்பிய சுப்மன் கில் இப்போட்டியில் 36 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.

மற்றொரு வீரர் ராகுல் திரிப்பாதி வெறும் 16 பந்துக்கு 35 ரன்கள் விலாசி இந்திய அணியின் கியரை மாற்றிவிட்டு ஆட்டம் இழந்தார். வழக்கம்போல வானவேடிக்கை காட்டிய சூரியகுமார் யாதவ், இப்போட்டியிலும் அரைசதம் கடந்த பிறகு தனது அதிரடியை மீண்டும் வெளிப்படுத்தி டி20 போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா இருவரும் தலா நான்கு ரன்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்த அக்சர் பட்டேல் இப்போட்டியிலும் 9 பந்துகளில் 21 ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் ரோல் விளையாடினார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் விலாசி இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்தது.

தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டியில் இலங்கை அணிக்கு 229 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் இலங்கை அணிக்கு அதிகபட்சமாக மதுஷங்கா 2 விக்கெட்களையும், ரஜிதா, கருணரத்னே மற்றும் ஹசரங்கா மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.