சார்!நான் ஏன் உங்கள் பேச்சை கேட்க வேண்டும்? நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டு போயிடுவீங்க! – இந்திய நட்சத்திரத்துடன் தனது முதல் சந்திப்பை பகிர்ந்து கொண்ட முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!

0
768

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பைக்கு பின்னர் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பணிக்காலம் முடிவடைந்ததை அடுத்து தன் பொறுப்பில் இருந்து பதவி விலகினார். அவருடன் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் இந்திய அணியின் முன்னாள் ஃபீல்ட்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரும் பொறுப்பிலிருந்து விலகினர்.

இவர்களது பயிற்சி காலத்தின் போது இந்திய அணி உலகக்கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் வெற்றி பெற வில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த அணியாக விளங்கியது. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதும் அங்கு சென்று தொடர்களை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவில் சென்று 2018 மற்றும் 2020-21 ஆண்டுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. மேலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் ஒரு நாள் போட்டி தொடர்களை பொறுத்தவரை இரண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்தது . மேலும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வி என சற்று பின்னடைவுகளை சந்தித்தது. இவர்களது பணிக்காலம் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வரும் இந்திய அணியின் முன்னாள் ஃபீல்ட்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தனது அனுபவங்களை “இந்திய அணியுடனான எனது நாட்கள்” என்று புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் தனது அனுபவங்களில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீதர் . இந்தியா அணிக்கு பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு இந்திய அண்டர்-19 அணியின் துணை பயிற்சியாளராக பணியாற்றினார் . மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஃபீல்ட்டிங் பயிற்சியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இது பற்றி அந்த புத்தகத்தில் கூறியுள்ள ஸ்ரீதர் ” உள்நாட்டு கிரிக்கெட் அணிகள் மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சி அளிப்பதில் இருந்து இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மேலும் என்னுடைய பயிற்சி முறைகளில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது” என்று குறிப்பிட்டு இருக்கிறார் . இது பற்றி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அவர் ” இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுடனான என்னுடைய முதல் சந்திப்பு என் பயிற்சி திட்டங்களில் நிறைய மாற்றங்களை கொண்டு வர உதவியது “என்று குறிப்பிட்டு இருக்கிறார்

இதனைப் பற்றி எழுதியுள்ள அவர் ” இந்தியா அணியின் பயிற்சியாளராக 2014 ஆம் ஆண்டு நான் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அஸ்வின் உடன் உரையாடினேன் . அப்போது அஸ்வின் “நான் உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன், தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் “என கேட்டார். “நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்? இதற்கு முன் ஒரு பயிற்சியாளர் இருந்தார்! அவரது பயிற்சி முறைகளை நாங்கள் பின்பற்றி வந்தோம். இப்போது அவர் அணியில் இல்லை. நீங்கள் புதிய பயிற்சியாளராக வந்திருக்கிறீர்கள். இப்போது நாங்கள் உங்கள் பயிற்சி முறைகளை பின்பற்ற உள்ளோம் . அதன் பின்பு நீங்களும் சென்று விடுவீர்கள்” என்று என்னிடம் கூறினார். “அவருடன் இந்த உரையாடல் தான் என்னுடைய பயிற்சி முறைகளில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வர காரணமாக இருந்திருக்கிறது ” என தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் ஸ்ரீதர். .

2014 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஃபீல்ட்டிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ராவர் பைலிஸ் அணில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய மூன்று தலைமை பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் . இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி உலக அரங்கில் சிறந்த ஃபீல்ட்டிங் செய்யும் அணியாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.