ஐபிஎல் வந்த அப்புறம் தான் இந்தியா டி20 உலகக்கோப்பை ஜெயிக்கல – கிண்டலடித்த வாசிம் அக்ரம்!

0
1227

ஐபிஎல் வந்த பிறகுதான் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லவில்லை என்று கிண்டல் அடித்திருக்கிறார் வாசிம் அக்ரம்.

டி20 உலக கோப்பை தொடர் முதல் முதலாக 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகத் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, உலகில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஏனெனில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடர் நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய அணிக்கு 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைத் தொடர் புதிய பாதையை வகுத்துக் கொடுத்தது. அதற்கு அடுத்ததாக வந்த ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையும் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் துவங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பல இளம் வீரர்கள் டி20 போட்டிகளின் மீது ஆர்வம் கொண்டு விளையாடி இந்திய அணிக்கு பலம் சேர்ப்பர் என்ற நோக்கிலும் துவங்கப்பட்டது.

துரதிஷ்டவசமாக இந்திய அணி 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு, டி20 உலக கோப்பை வெல்லவில்லை. 2022 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறிய பிறகு, இப்படியான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் வாசிம் அக்ரம்.

அவர் கூறியதாவது: “2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வந்தபோது இந்தியாவிற்கு டி20 எதிர்காலம் இருக்கிறது என்ற நோக்கில் பலரும் நினைத்தினர். ஆனால் அதற்கு அப்படியே தலைகீழாக மாறி, அதன் பிறகு தான் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லவில்லை.

தற்போது வரை தனது அணுகுமுறையை இந்தியா மாற்ற நினைக்கவில்லை. இன்று கூட வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நினைத்தேன். ஆனால் இந்திய அணி நிர்வாகம் மறுத்திருக்கிறது. இது எப்படி எதிர்காலத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று எனக்கு புரியவில்லை.” என கிண்டலாக பேசினார்.