55 பந்தில் 126 ரன்கள்; கர்நாடகாவை பந்தாடிய சுப்மன் கில்!

0
684

சையத் முஸ்தக் அலி தொடரில் கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் 126 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் சுப்மன் கில்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டிகளில் ஒன்றான சையது முஸ்தக் அலி தொடர் தற்போது காலிறுதி சுற்றை எட்டி இருக்கிறது.

முதல் கால் இறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகா மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். அபிஷேக் சர்மா நான்கு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன்4 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பஞ்சாப் அணி 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங், சுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, பஞ்சாப் அணி சரிவிலிருந்து மீண்டு ஸ்கொர் உயர்ந்தது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 151 ரன்கள் சேர்த்தது. அன்மோல் சிங் 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் களமிறங்கிய சன்விர் சிங், சுப்மன் கில்லுக்கு பக்கபலமாக இருக்க, கில் 49 வது பந்தில் சதம் அடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்திருந்தது.

சுப்மன் கில் 55 பந்துகளில் 126 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். இதில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். சன்விர் சிங் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மந்திப் சிங் ஒரு ரன்னில் களத்தில் இருந்தார்.

இமாலய இலக்கை துரத்திய கர்நாடக அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 12.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்து இருக்கிறது. அதிகபட்சமாக 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்த மனிஷ் பாண்டே ஆட்டமிழந்து வெளியேறினார்.

கர்நாடகா அணி வெற்றிபெற 36 பந்துகளில் 104 ரன்கள் தேவைப்படுகிறது.