ஷுப்மன் கில் அரை சதம் ! சச்சின் டெண்டுல்கரின் 25 வருடச் சாதனையை தகர்த்த இளம் வீரர் கில்

0
541
Shubman Gill and Sachin Tendulkar

சச்சினின் 25 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.. அசால்ட்டாக செய்துமுடித்த சுப்மன் கில்!!

சச்சின் டெண்டுல்கரின் 25 ஆண்டுகால சாதனையை துவக்க வீரர் சுப்மன் கில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது முறியடித்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் இந்திய அணிக்காக ஷிகர் தவான் முதல்முறையாக கேப்டன் பொறுப்பு வகிக்கிறார். துணை கேப்டனாக ஜடேஜா முதலில் நியமிக்கப்பட்டிருந்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் விலகியதால், தற்போது ஷ்ரேயாஷ் துணை கேப்டன் பொறுப்பினை ஏற்றுள்ளார்.

டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான், பந்துவீச்சினை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு கேப்டன் தவான் மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று வந்த சுப்மன் கில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இடம் பிடித்துள்ளார். தன்னை நிரூபித்து காட்டுவதற்கு சரியான போட்டியாக இது இருக்கும் என்று கருதி துவக்கம் முதலே தனது அதிரடியை வெளிப்படுத்த துவங்கிய இவர், 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார்.

இதன் மூலம் 25 ஆண்டுகால சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவர் முறியடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், மேற்கிந்திய தீவுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவக்க வீரராக களம் இறங்கி தனது 24ஆவது வயதில் அரைசதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகளில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த இந்திய அணியின் துவக்க வீரர் எனும் சாதனையை படைத்தார். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை துவக்க வீரர் சுப்மன் கில் முறியடித்திருக்கிறார். சுப்மன் கில் 22 வயது 317 நாட்களில் இந்த சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் மற்றுமொரு துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மிக அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை தற்போது படைத்திருக்கிறார். இதற்கு முன்னதாக, 1999 ஆம் ஆண்டு அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் தனது 36 வயது 120 நாட்களில் அரைசதம் அடித்திருந்தது சாதனையாக இருந்தது. தற்போது தவான் 36 வயது 229 நாட்களில் அடித்து 23 ஆண்டுகால சாதனையை முறியடித்திருக்கிறார்.