விராட் கோலி, தவான் சாதனையை முறியடிக்கும் சுப்மன் கில்; நியூசிலாந்து தொடரில் அரிய வாய்ப்பு!

0
502

நியூசிலாந்து தொடரில் தவான் மற்றும் விராட் கோலி இருவரின் சாதனையை முறியடிக்க சுப்மன் கில் காத்திருக்கிறார்.

இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சுப்மன் கில், துவக்க வீரராக களமிறங்குவதற்கு கடும் விமர்சனங்களை சந்தித்தார். ஏனெனில் வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தார். இரட்டை சதம் அடித்த ஒரு வீரரை வெளியில் அமர்துவது சரியாக இருக்காது என பலரும் விமர்சித்தனர்.

அணி நிர்வாகம் சுப்மன் கில்லை துவக்கப் வீரராக களமிறக்கியது. இந்த முடிவிற்கு நியாயம் செய்திருக்கிறார் அவர். முதல் ஒருநாள் போட்டியில் 60 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 116 ரன்கள் அடித்து, சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்

இதுவரை 18 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள கில், 5 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட 894 ரன்கள் அடித்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்கள் எட்டுவதற்கு இன்னும் 106 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் அதிவேகமாக 24 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்த சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.