ஒரே டி20 தொடரில் மூன்று அரை சதம் ; விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஷ்ரேயாஸ் ஐயர் புது சாதனை

0
286
Virat Kohli and Shreyas Iyer

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி சற்று முன்னர் நடந்து முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இறுதி போட்டியான மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் 74* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 73*ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய வீரர்கள் மத்தியில் டி20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் குவித்த வீரராக விராட்கோலி மட்டுமே இருந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் குவித்து அந்த தொடரில் மொத்தமாக 231 ரன்கள் குவித்தார்.

இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில், கோலியின் சாதனையை சமன் செய்து அவருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் குவித்து ஸ்ரேயாஸ் ஐயர் மொத்தமாக 204 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் 57* ரன்கள் இரண்டாவது போட்டியில் 74* ரன்கள் இன்று நடந்து முடிந்துள்ள மூன்றாவது போட்டியில் 73* ரன்கள் என தனது அதிரடியை இந்த தொடர் முழுக்க ஸ்ரேயாஸ் ஐயர் காட்டியுள்ளார்.

- Advertisement -

அதேபோல மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட்கோலி (199 ரன்கள் ) முதலிடத்தில் இருந்தார். இன்று அவரை பின்னுக்கு தள்ளி ஸ்ரேயாஸ் ஐயர் (204 ரன்கள்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்துள்ள டி20 தொடரில் விராட் கோலியை ஓய்வு எடுத்ததன் காரணமாக விளையாடவில்லை. அவருடைய இடத்தில் அவர் விளையாடும் அளவுக்கு மிக நேர்த்தியாக ஸ்ரேயாஸ் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமையாக பேசிக் கொண்டு வருகின்றனர்.