ஐபிஎல் தொடரும் மிஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மிஸ்… அடுத்த 4-5 மாதங்கள் அணியில் இருக்கமாட்டார்; இந்திய அணிக்கு பெருத்த அடி!

0
695

அடுத்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவற்றிலிருந்து விலகுகிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவர்களிடம் ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்யவில்லை.

- Advertisement -

பின்னர் ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிக்கொண்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், உடல்நிலை குறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது என தெரிவித்தனர்.

ஒரு வாரம் சிகிச்சைக்குப் பின்பு, மருத்துவர்கள் இன்று ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை என்பதால், குறைந்தபட்சம் 4 முதல் 5 மாதங்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது முழுமையாக ஓய்வு தேவை என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது ஐபிஎல் தொடர் முழுவதும் இருக்க மாட்டார் மற்றும் அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் இரண்டாவது வாரம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலும் விளையாட மாட்டார்கள் என்று உறுதியாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன்னர் முதுகுப்பகுதி காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் ஆகியோரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த சில மாதங்களுக்கு விளையாட முடியாமல் இருக்கின்றனர்.

ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்கக்கூடிய முன்னணி வீரர்கள். முக்கியமான போட்டிகளில் இவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது. இங்கிலாந்து மைதானங்களில் நடக்கும் பைனலில் இவர்கள் இல்லாமல் இந்திய அணி எத்தகைய தாக்குதலை ஆஸ்திரேலிய அணிக்கு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.