விராட் கோலியின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்து மாஸ் காட்டிய ஷ்ரேயாஷ் ஐயர்

0
195

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஷ் ஐயர், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் கில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 119 ரன்கள் சேர்த்தனர். கில் 64 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயாஷ், சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இவரும் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்த ஷ்ரேயாஷ் ஐயர், விராட் கோலியின் சாதனையை முறியடித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் முதல் 25 இன்னிங்ஸில் அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 10 அரைசதங்கள் மூலம் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது ஷ்ரேயாஷ் ஐயர், 11 அரைசதங்கள் அடித்து விராட் கோலியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து, 12 அரைசதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வரும் ஷ்ரேயாஷ் ஐயர், முன்னாள் கேப்டன் விராட் கோலி இல்லாத போது மூன்றாவது இடத்தில் களமிறங்கி நல்ல ரன் ரேட் மற்றும் சராசரி வைத்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலியின் சராசரி மிகவும் குறைவாக இருக்கிறது. அவரது அனுபவமே தொடர்ந்து அவரை இந்திய அணியில் வைத்திருக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் விராட் கோலி தொடர்ந்து மோசமாக விளையாடினால் அணியில் இருந்தே அவர் நீக்கப்படலாம். அந்த இடத்திற்கு ஷ்ரேயாஷ் ஐயர் சரியான வீரராக இருப்பாரா? என்ற விவாதங்களும் தற்போது நிலவி வருகிறது. இவை அனைத்திற்கும் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது சதங்கள் மூலமே பதிலளிக்க இயலும். ஏனெனில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பங்கதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு, எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி சதங்கள் அடிக்கவில்லை. இதுவும் அவர் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -