கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

விமானத்தை தவறவிட்டதால், டி20 உலகக்கோப்பையிலிருந்து விண்டீஸ் வீரர் நீக்கம்! வேறொரு வீரர் சேர்ப்பு!

விமானத்தை தவறவிட்டதால் டி20 உலக கோப்பையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் சிம்ரன் ஹெட்மயர்.

- Advertisement -

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் முடிவுற்ற பிறகு, டி20 கோப்பை தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்று இருந்த விண்டீஸ் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று டி20 உலக கோப்பைக்கு முன்பாக, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளனர். இதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அக்டோபர் 1ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர்.

அணியுடன் சிம்ரன் ஹெட்மயர் செல்லவில்லை. ஓரிரு நாட்கள் அவகாசம் கேட்டு தனது விமானத்தை வேறொரு தேதிக்கு மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அக்டோபர் 3ம் தேதி மாலை வேறொரு விமானம் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. சிம்ரன் ஹெட்மயர் அந்த விமானத்தையும் தவற விட்டதால், டி20 உலககோப்பை அணியில் இருந்து சிம்ரன் ஹெட்மயர் நீக்கப்படுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்தின் இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ் அறிவித்தார். அவருக்கு மாற்று வீரராக சம்ரா ப்ரூக்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் ஆடம்ஸ் கூறுகையில், “மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவினரிடம் இது குறித்து நான் அறிவிப்பு கொடுத்தேன். அதில் சிம்ரன் ஹெட்மயர் டி20 உலக கோப்பையில் இருந்து நீக்கப்பட்டு சம்ரா ப்ரூப்ஸ் அணியில் இணைக்கப்படுகிறார். கடந்த சனிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக சிம்ரன் ஹெட்மயர் தனது விமானத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அவருக்கு மட்டும் திங்கட்கிழமை மாலை வேறொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இன்னும் தாமதம் ஏற்பட்டால் சந்தேகத்திற்கு இடமின்றி அணியில் இருந்து நீக்கப்பட்டு வேறொரு வீரர் சேர்க்கப்படும் என தெரியப்படுத்தியிருந்தோம்.

- Advertisement -

அதை பொருட்படுத்தாமல் மேலும் தாமதமானதால் இத்தகைய முடிவினை மேற்கொண்டு இருக்கிறோம். மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் தொடரில் இது போன்ற விஷயங்கள் சமரசம் செய்து கொள்ளப்படாது. அணியினருக்கு போதிய அளவு பயிற்சி தேவை. அதில் நாங்கள் முழு கவனத்துடன் இருக்கிறோம்.” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “சமீபத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ப்ரூக்ஸ் ஆடியோ விதத்தை நாங்கள் தொடர்ந்து கவனித்து வந்தோம். சிம்ரன் இடத்திற்கு அவர் மிகச் சரியான வீரராக இருப்பார் என கருதினோம் உடனடியாக மாற்றுவீரராக அவரை அறிவித்து விட்டோம்.” என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Published by