கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் பந்துவீசாமல் இருந்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ள ஷிக்கர் தவான்

டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்தாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியது. முதல் போட்டி பார்ல் மைதானத்தில் ஜனவரி 19 அன்று நடைபெற்றது. கேப்டன் பவுமா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். 17.4 ஓவரில் தென்னாபிரிக்கா 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்த டி காக் 27 ரன்களிலும் மலன் 6 மற்றும் மார்க்கரம் 4 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

- Advertisement -

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாவுமா – வான்‌டர் டசன் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு பக்கம் பவுமா நிதானமாக ஆட மறுபக்கம் வான்‌டர் டசன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். பவுமா 110 ரன்களுக்குப் பெவகலியன் திரும்பினார். வான்‌டர் டசன் கடைசி வரை நின்று 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் சேர்த்து மொத்தம் 129 ரன்கள் விளாசினார். 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 296 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தனர். குறிப்பாக 18 முதல் 48 ஓவர்கள் வரை அவர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பாவுமா – வான்‌டர் டசன் ஜோடியை பிரிக்கத் தவறினர். இப்போட்டியில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் பங்கேற்றும் ஒரு ஓவர் கூட போடாதது குறித்து பல கேள்விகள் எழும்பின. இது குறித்து இந்திய துவக்க ஆட்டக்காரர் தவான் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சின் போது வெங்கடேஷ் ஐயரின் பங்களிப்பு அணிக்குத் தேவைப்படவில்லை. ஆடுகளத்தில் பந்து சற்று திரும்பியது அதுமட்டுமில்லாமல் எங்கள் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்பட்டனர். மிடில் ஓவர்களில் விக்கெட் விழாத போது எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்களை அழைக்க எண்ணினோம் ஆனால் எங்களால் அதை செய்ய முடியவில்லை. அதன்பின்னர் கடைசி ஓவர்களில் நாங்கள் அதை செய்தோம் ” என்றார்.

- Advertisement -

297 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தவான் – கே.எல்.ராகுல் களமிறங்கினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்திய அணி, மிடில் ஆர்டர் சொதப்பலால் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தவான் 79 மற்றும் கோஹ்லி 51 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஷர்தூல் தாக்கூர் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசினார். இது குறித்தும் தவான் மனம் திறந்தார். “ அணியின் தேவைக்கேற்ப ஆடுவதே மிகவும் அவசியம். பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டுமெனில் அதற்கேற்ப ஆட வேண்டும். தனி நபர் ஆட்டம் முக்கியம் தான் அதோடு சேர்த்து அணியின் ஆட்டத்தையும் பார்க்க வேண்டும். அதற்கான நேரம் மற்றும் அனுபவத்தோடு இந்திய இளம் வீரர்கள் அதைக் கற்றுக் கொள்வர் ” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Published by