பெருமையா இருக்கு-ஷிகர் தவான்; என் கடமை- சிராஜ்; என் இலக்கு- குல்தீப் – வெற்றிக்குப் பிறகு கருத்து!

0
249
ICT

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது.

முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடர் சமநிலையில் இருக்க, இன்று நடந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 99 ரன்களுக்கு சுருள, இந்திய அணி மிக எளிதாக மூன்று விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவன் பேசும்பொழுது ” இந்தத் தொடரில் இளம் வீரர்கள் விளையாடிய விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் முதல் ஆட்டத்தில் நிறைய குணாதிசயங்களை காட்டினோம். சில கேட்சிகளை தவற விட்டோம். ஆனால் நாங்கள் எங்கள் மீது அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மட்டுமே கவனம் கொடுத்தோம். நான் எனது கிரிக்கெட் பயணத்தை ரசித்து அனுபவித்து வருகிறேன். அணிக்காக என்னால் முடிந்ததை நான் நிச்சயம் தருவேன். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளங்களில் இந்திய அணியில் இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். இன்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமான நிலையில் இருந்தார்கள் ” என்று கூறினார்.

தொடர் நாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் கூறும்பொழுது ” ஒரு நல்ல அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் பொழுது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எனக்கு இப்போது அப்படித்தான் இருக்கிறது. அணிக்கு முதலில் பந்து வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக எனக்கு பொறுப்புகள் இருக்கிறது. பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். தொடக்கத்தில் பந்துவீசும் போது சரியான நீளத்தில் வீசுவதற்கு முக்கியத்துவம் தருகிறேன். வேகப்பந்து வீச்சாளராக உங்களுக்குள் அந்த நெருப்பும் ஆர்வமும் தேவை ” என்று கூறினார்.

- Advertisement -

இன்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ் கூறும்போது “உண்மையைச் சொல்வதென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று விக்கெட் நன்றாக இருந்தது. அனுபவித்து விளையாடுகிறேன். எனது பந்துவீச்சை ரசிக்கிறேன் அதே சமயத்தில் முடிவுகள் பற்றி கவலைப்படுவதில்லை. செயல்பாட்டிலும் எனது ரிதத்திலும் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தொடர்ச்சியாக நல்ல பகுதிகளில் பந்துவீச முயற்சி செய்கிறேன். தற்பொழுது நடந்துவரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக செயல்படுவதே எனது அடுத்த இலக்கு ” என்று கூறினார்!