சி.எஸ்.கே இந்த மூன்று வீரர்களை தான் தக்கவைத்துக் கொள்ளும் – ஷான் பொல்லாக் கணிப்பில் தோனி இல்லை

0
87
MS Dhoni and Shaun Pollock

நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தன்னுடைய நான்காவது ஐபிஎல் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதேசமயம் அடுத்த ஆண்டுக்கான ஒரு மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து மூன்று வீரர்களை மட்டுமே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் சென்னை அணி நிச்சயமாக இந்த மூன்று வீரர்களை தக்க வைத்து கொள்ளும் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தற்போது கணித்துள்ளார்.

ருத்துராஜ் கெய்க்வாட்

புனேவில் பிறந்த இவர் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அணியில் களமிறங்கி தன்மீதான நம்பிக்கையை, சிறப்பான பேட்டிங் மூலமாக சென்னை அணி நிர்வாகம் மத்தியில் ஏற்படுத்தினார். அவருக்கு இந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதியில் ஆரஞ்சு தொப்பியை ருத்துராஜ் கைப்பற்றி அசத்தியுள்ளார். சென்னை அணி கோப்பையை கைப்பற்ற இவரும் ஒரு முக்கிய வீரராக இந்த ஆண்டு விளங்கினார். இளம் வீரராக இருக்கும் அதே பட்சத்தில் சிறப்பான பார்மில் இருக்கும் இவரை கண்டிப்பாக அடுத்த ஆண்டு சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துக்கொள்ளும் என்று பொல்லாக் கணித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

சென்னை அணியை எடுத்துக் கொண்டால் அதில் எல்லா போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக காணப்படும் ஒரு வீரர் ஜடேஜா. தன்னுடைய அற்புதமான பேட்டிங் பவுலிங் மற்றும் பில்டிங் என எதிரணியை திக்குமுக்காட செய்வதில் இவர் திறமை பெற்றவர். இந்த ஆண்டு 16 போட்டிகளில் தன்னுடைய பேட்டிங் மூலமாக 227 ரன்களையும் பௌலிங் மூலமாக 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இவருடைய அனுபவம் மற்றும் சிறப்பான திறமை கருதி நிச்சயமாக சென்னை அணி இவரை இனி வரும் ஐபிஎல் தொடரிலும் விளையாட வைக்கவே பார்க்கும். அதன் அடிப்படையில் நிச்சயமாக இவரும் அடுத்த ஆண்டு அந்த அணி நிர்வாகத்தால் தக்கவைக்க படுவார் என்று பொல்லாக் கூறியுள்ளார்.

ஃபேப் டு பிளேசிஸ்

சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றியதில் ருத்துராஜுக்கு எந்த அளவுக்கு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு இவருக்கும் உள்ளது. 16 போட்டிகளில் இவர் 633 ( ருத்துராஜை விட 2 ரன்கள் மட்டுமே குறைவு) ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக இறுதி போட்டியில் 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். இவருடைய பேட்டிங் மற்றும் அபாரமான ஃபீல்டிங் காரணமாக நிச்சயமாக அடுத்த ஆண்டும் இவர் சென்னை அணி நிர்வாகத்தால் தக்கவைக்கப்படுவார் என்று ஷான் பொல்லாக் கணித்துள்ளார்.

மேலும் பேசிய ஷான் பொல்லாக் நிச்சயமாக அடுத்த ஆண்டு சென்னை அணி மகேந்திர சிங் தோனியை தக்க வைத்துக் கொள்ளாது என்று கூறியுள்ளார். இன்னும் மூன்று ஆண்டுகாலம் அவர் விளையாடுவார் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. எனவே அதன் அடிப்படையில் தோனி தக்கவைக்க அதிக வாய்ப்பு இல்லை. நிச்சயமாக மகேந்திர சிங் தோனி சென்னை அணியில் ஏதேனுமொரு பிரிவில் சென்னை அணியை வழிநடத்துவார். சென்னை நிர்வாகத்தின் மேனேஜ்மெண்ட் பிரிவில் முக்கிய பதவியை தோனி வகிப்பார் இன்று ஷான் பொல்லாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.