5 டாப் டி20 வீரர்களை தேர்வு செய்த வாட்சன்.. ஒரே ஒரு இந்தியருக்கு மட்டும் இடம்

0
1034

உலகின் டாப் 5 டி20 கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேட் வாட்சன் தேர்வு செய்துள்ளார். இதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய வாட்சன் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற டி20 லீக் அணியில் இடம் பெற்று அந்த நாட்டு ரசிகர்களின் அபிமான வீரராக விளங்கினார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாட்சன் விளையாடிய நாட்களை சிஎஸ்கே ரசிகர்கள் இன்றளவும் மறக்க மாட்டார்கள். தற்போது 41 வயதான வாட்சன் டெல்லி கேப்பிட்டல் அணியின் துணைப் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். ஐசிசி t20 உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் வாட்சனிடம் தற்போதுள்ள சூழலில் சிறந்த ஐந்து டி20 வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வாட்சன் தம்மை உலக சிறந்த டி20 அணியை தேர்வு செய்ய சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஐந்து வீரர்களை தேர்வு செய்து விடுவேன் என்று கூறினார். அதில் முதல்வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பெயரை வாட்சன் குறிப்பிட்டுள்ளார். எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை கூட அடித்து ரன் சேர்த்து விடுகிறார் என்று பாராட்டியுள்ள வாட்சன், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பாபர் அசாம் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்திய வீரர் சூரியகுமார் யாதவை இரண்டாவது வீரராக தேர்வு செய்த வாட்சன், தற்போதைய சூழலில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பிரமிப்பை ஏற்படுத்துவதாக கூறினார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் கே எல் ராகுல்அதிரடியாக விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

மூன்றாவது வீரராக டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ள வாட்சன், கடந்த டி20 உலக கோப்பையில் வார்னர் தொடர் நாயகன் விருது வென்றதை சுட்டிக்காட்டினார்.சொந்த மண்ணில் உலகக் கோப்பை நடைபெறுவதால் அவர் சாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். நான்காவது வீரராக ஜாஸ் பட்லரை தேர்வு செய்துள்ள வாட்ஸ்சன், ஒரே ஐபிஎல் தொடரில் அவர் நான்கு சதங்கள் விளாசி இருப்பதை சுட்டிக்காட்டினார். பட்லர் ஃபார்மில் இருக்கும் போது அவரை ஆட்டமிழக்க செய்வது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார்.

ஐந்தாவது வீரராக பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியை வாட்சன் தேர்வு செய்துள்ளார். விக்கெட் வீழ்த்தும் திறமை தம்மை கவர்ந்திருப்பதாக குறிப்பிட்ட வாட்சன் டி20 உலக கோப்பையில் அவர் சோபிக்கவில்லை என்றால் அது தமக்கு ஆச்சரியத்தை தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பும்ரா, ரோஹித் சர்மா ஆகியோரை வாட்சன் தேர்வு செய்யாதது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.