2016ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில் என்னுடைய இந்த தவறால் விராட் கோலி கோப்பை வெல்ல முடியாமல் போனது – ஷேன் வாட்சன் வருத்தம்

0
1986
Shane Watson and Virat Kohli

2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை அவ்வளவு எளிதில் பெங்களூரு அணி ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அந்தத் தொடரில் பெங்களூரு அணி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக அற்புதமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி அந்த ஒரு சீசனில் மட்டும் 973 ரன்கள் குவித்தார். இன்றுவரை அந்த சாதனையை எந்த ஒரு பேட்ஸ்மேன் ஆனாலும் நெருங்க கூட முடியவில்லை.

இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூரிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பெங்களூரு அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

- Advertisement -

இறுதி போட்டியில் சுமாராக விளையாடிய ஷேன் வாட்சன்

அந்த போட்டியில் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஷேன் வாட்சன் மிக சுமாராகவே விளையாடினார். 4 ஓவர்கள் வீசி எந்த ஒரு விக்கெட்டையும் கைபற்றாமல் மொத்தமாக 61 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 24 ரன்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல பேட்டிங்கிலும் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

நான் உடைந்து விட்டேன் – ஷேன் வாட்சன்

- Advertisement -

அந்த இறுதிப் போட்டியை பற்றி தற்போது ஷேன் வாட்சன் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.”அந்த ஆண்டு பெங்களூரு அணி மிக அற்புதமாக விளையாடியது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் காட்டுத் தீப்போல ரன் குவித்தார். இறுதிப் போட்டியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

பெங்களூரு அணிக்கும் பெங்களூர் அணி ரசிகர்களுக்கும் அந்தப் போட்டி எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்றாக தெரியும். நீண்டகால தேடலாக இருந்த ஐபிஎல் கோப்பை அந்த ஆண்டு அவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். குறிப்பாக விராட் கோலி போன்ற அற்புதமான ஒரு வீரர் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வெல்வது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும்.

அந்த போட்டியில் நான் வீசிய இறுதி ஓவரில் 24 ரன்கள் பறிபோனது. அது தவறாகி விட்டது, காலத்தின் முடிவைப் போல் உணர்ந்தேன். உண்மையில் நான் அப்பொழுது சுக்குநூறாக உடைந்து விட்டேன்”, என்று ஷேன் வாட்சன் அப்போது தன் மனநிலை எப்படி இருந்தது என்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சொதப்பிய ஷேன் வாட்சன் 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு அதே ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அவர் அடித்த சதம் சென்னை அணியை மிக சுலபமாக வெற்றி பெறச் செய்தது. அந்த ஆண்டு சென்னை அணி 3-வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.