மயங்கிய நிலையில் கிடந்த ஷேன் வார்னே – 52 வயதில் திடீரென காலமானதால் கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி

0
835
Shane Warne

1990 காலகட்டங்களில் லெக் ஸ்பின் பந்து வீச்சில் கொடிகட்டி பறந்த ஒரு பந்து வீச்சாளர் என்றால் அது ஷேன் வார்னே தான். அவருடைய மாயாஜால சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் தூக்கத்தை தொலைத்த கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி, பல சாதனைகளை தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொண்டார். 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐபிஎல் தொடர் நடந்த வருடம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ஷேன் வார்னே தான்.

- Advertisement -

இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக விளங்கி வந்த ஷேன் வார்னே இன்று எதிர்பாராதவிதமாக இம்மண்ணை பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார். தாய்லாந்தில் தன்னுடைய வில்லாவில் வசித்து வந்த அவர் சந்தேகத்திற்குரிய மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இறப்பு குறித்த கூடுதல் விவரங்கள் அவரது குடும்பத்தின் அனுமதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வார்னேவின் பங்களிப்பு

ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் (800 விக்கெட்டுகளுடன்) இருக்கையில், இரண்டாவது இடத்தில் ஷேன் வார்னே இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமன்றி 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளையும், 73 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளையும் ஷேன் வார்னே கைப்பற்றியிருக்கிறார்.

- Advertisement -

1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற ஷேன் வார்னே கொடுத்த பங்களிப்பு பங்கு மிகப்பெரியது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல 1992 ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையில் ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அந்த ஐந்து சீரியஸ் வெற்றிகளிலும் ஷேன் வார்னேவின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

அவருடைய இறப்பை நம்பமுடியாத அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் அவர் குறித்த பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், அவர் குறித்த நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.