தென்னாபிரிக்கா தொடரில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!

0
1084

தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் முகமது சமி சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளுடன் தலா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டது.

அதன்படி முதலில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-1 என்று கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில், முதல் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

துரதிஷ்டவசமாக, இத்தொடரில் இருந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக முகமது சிராஜ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று மோசமாக காணப்பட்டது. இதற்கு முழு முக்கிய காரணம் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்கள் இடம் பெறாதது ஆகும். காயத்திலிருந்து குணமடைந்து வந்த பும்ரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடினார். தற்போது மீண்டும் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார் .

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதற்கு முன்னேற்பாடாக உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் இருவரும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு பயணிப்பர் என்று பிசிசி தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

மற்றொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ரிசர்வ் வரிசையில் இருக்கிறார். பும்ரா காயம் காரணமாக விளையாடவில்லை என்றால் டி20 உலக கோப்பையில் முகமது சமி உள்ளே எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டி20 தொடரில் முகமது சமி இடம் பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அதே நேரம் தென்னாபிரிக்க அணியுடன் டி20 தொடரிலும் இல்லை. இவரை நேரடியாக ஆஸ்திரேலியா சென்று டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வைப்பது சரியாக இருக்காது என முடிவு செய்த பிசிசிஐ, தென்னாபிரிக்க டி20 தொடர் முடிவுற்றவுடன் வரவிருக்கும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு முகமது சமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஆட்டம் போல ஒருநாள் தொடரில் விளையாடிட்டு, பின்னர் ஆஸ்திரேலியவிற்கு செல்கிறார். தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வரிசையில் இருக்கும் முகமது சமி, அக்டோபர் 4ம் தேதி தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெறும் கடைசி டி20 முடிந்த பிறகு அடுத்த நாள் ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் இந்திய அணியுடன் செல்ல மாட்டார் என்ற தகவல்களும் வெளிவந்திருக்கிறது.