ஒரே ஒரு பந்து வீசி காட்டட்டுமா ஸார்?- இந்திய வீரர் முகேஷ் குமாரின் ஆச்சரியமான சாதனை கதை!

0
7718
Mukesh kumar

தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நடுவரிசை பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் மற்றும் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் இருவரும் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த இருவரின் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் கதைகளும் மிகவும் வித்தியாசமானது சுவாரசியமானது கூடவே பல கடினங்களும் நிறைந்தது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் ஜாய் பட்டாச்சார்யா முகேஷ் குமார் எப்படி பெங்கால் அணிக்குள் வந்தார்? அவர் வாழ்க்கை கதை எப்படியானது? என்று சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி ஜாய் பட்டாச்சாரியா கூறும்பொழுது ” முகேஷ் குமார் ஒரு அற்புதமான வீரர். அவரது வாழ்க்கை கதையும் மிகவும் சுவாரசியமானது. அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர வேண்டும் என்பது அவரது தந்தையின் விருப்பம். அதற்காக அவர் மூன்று முறை முயற்சி செய்தும் அவரால் தேர்வாக முடியவில்லை. ஆனால் இதனால் ஒரு நல்ல கதை பின்னால் இருக்கிறது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் அப்பொழுது கொல்கத்தா வீரர்களை பார்வையிட வருவதாக இருந்தார். எதிர்காலத்திற்கான சில வீரர்களை அடையாளம் காண வேண்டியது இருந்தது” என்று கூறியவர்…

மேலும் தொடர்ந்து “வீரர்களை பார்வையிட்டும் பரிசோதித்தும் முடிந்த நேரத்தில், ஒரு குழந்தை வந்து ‘ நான் நெட்ஸில் ஒரே ஒரு பந்து மட்டும் வீசட்டுமா?’ என்று கேட்கிறது. இந்தக் குழந்தைக்கு மற்றவர்களோடு சேர்ந்து பந்துவீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் இந்த குழந்தை எந்த கிளப்பிலும் இருந்து வரவில்லை. பின்பு அந்தக் குழந்தை ஒரு பந்து வீசுகிறது. வக்கார் யூனிஸ் இன்னுமொரு பந்து வீசு என்று கூறுகிறார். அடுத்து எல்லாம் முடிந்து வக்கார் யூனுஸ் கடைசியாக கூறும்பொழுது, ” இந்தப் பையன் சிறந்தவன் ; வந்திருந்ததில் இந்தப் பையன் மட்டும் தான் சிறந்தவன் என்று சொன்னார் ” என்று கூறினார்…

- Advertisement -

அடுத்து என்ன நடந்தது என்று அவர் மேலும் கூறும் பொழுது “பின்னர் முகேஷ் குமார் பெங்கால் அணியில் இடம் பெறுகிறார். ஆனால் இங்கு அவருக்கு தங்கும் இடம் கிடையாது. எனவே அவரிடம் ஈடன் கார்டன் மைதானத்திலேயே தங்க வைக்கப்படுகிறார். அப்பொழுது பெங்கால் அணியின் பிசியோவாக இருந்த கமலேஷ் ஜெயின் இவரைப் பார்த்துவிட்டு, இவர் உடம்பில் சத்து இல்லாமல் இருக்கிறார், இவர் உடம்பில் இன்னும் ஒரு பத்து கிலோ எடை ஏறவேண்டும் என்று கூறுகிறார். பின்பு அவருக்கு டயட் தரப்பட்டது. ஒரு வருடம் கழித்து அவர் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் பெங்கால் அணிக்காக பந்துவீசினார். ஒரு வீரர் உருவாகி வருவதற்கு அதிர்ஷ்டம் மட்டுமில்லை, ஒரு கிராமமே தேவைப்படுகிறது ” என்றார்!