ஷாகின் ஷா அப்ரிடி டி20 உலகக் கோப்பையில் விளையாடக் கூடாது; போர்க்கொடி தூக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்!

0
1091
Shaheen Afridi

இன்றைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராதான். இவருக்கு அடுத்து இப்படி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வேகப்பந்து வீச்சில் கொண்டிருக்கக் கூடியவர் 22 வயதான பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி!

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா முதல் சுற்றோடு வெளியேறி வந்ததற்கு இந்த பாகிஸ்தான் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிக முக்கிய காரணமாக இருந்தார். இந்தியாவுடனான போட்டியின்போது இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி மூவரையும் வெளியேற்றி இந்திய அணியின் ரன் வேகத்தை அடியோடு நிறுத்தி பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை சுலபம் ஆக்கினார்.

- Advertisement -

இந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்திருந்தது. அந்த டெஸ்ட் தொடரில் ஷாகின் அப்ரிடி பீல்டிங் செய்யும்பொழுது முழங்காலில் காயமடைந்தார். இந்தக் காயம் பெரிதாகி போகவே, இதற்கு சிகிச்சை எடுக்க அவர் இங்கிலாந்து சென்றார். தற்பொழுது தனது மறுவாழ்வுக்காக அவர் தொடர்ந்து இங்கிலாந்தில்தான் இருந்து வருகிறார். இதற்கு நடுவில் பாகிஸ்தான் கேப்டன் பாபரின் வேண்டுகோளால் ஆசிய கோப்பையில் அணியுடன் இருந்தார்.

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா டி20 உலகக் கோப்பைக்கு, இந்திய அணியுடனான முதல் போட்டிக்கு ஷாகின் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்தது முழு உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சல்மான் பட் மற்றும் ஆகூப் ஜாவித் ஆகியோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

சல்மான் பட் இதுகுறித்து கூறும் பொழுது
“ஷாகின் அப்ரிடி ஒரு உலகக் கோப்பைக்கான வீரர் கிடையாது. உடற்தகுதியுடன் இருந்தால் அடுத்த ஐந்து உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியும். அவசரப்பட்டு ஏதாவது முடிவெடுத்தால் இந்த காயம் பெரிதாகி பின்விளைவை மோசமாக்கும். அடுத்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை இருக்கிறது, மேலும் இவருக்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையை நீடிக்க அவரைப் பாதுகாக்க வேண்டும். அவர் காயம் அடையாது இருந்திருந்தால் ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடியிருப்பார். அப்படி இல்லாத காரணத்தால்தான் நதீம் ஷா டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார் ” என்று தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்!

- Advertisement -

அகூப் ஜாவித் கூறும்பொழுது ” ஷாகின் அப்ரிடி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு நாளும் பிறப்பதில்லை. அவர் டி20 உலக கோப்பையில் பங்கேற்க வேண்டாம் என்பது எனது தனிப்பட்ட அறிவுரை. ஏனென்றால் இந்த உலகக் கோப்பையை விட ஷாகின் நமக்கு மிக முக்கியமானவர்” என்று கூறியிருக்கிறார்!