ஷாகின் அப்ரிடி காயம்பட்டதற்கு பாகிஸ்தான் வாரியம் ஒரு காசு கூட தரவில்லை – மருமகனுக்காகக் களமிறங்கிய மாமா ஷாகித் அப்ரிடி வீடியோ இணைப்பு!

0
138
Shahid Afridi

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு கேப்டன் பாபர் ஆசம் முக்கியத் தலைவர் என்றால், பந்து வீச்சுக்குத் தலைவர் ஷாகின் அப்ரிடி. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் பிரபல வீரரான சாகித் அப்ரிடியின் மருமகன் ஆவார்.

22 வயதான இவர் இடக்கை வேகப்பந்துவீச்சாளர். நல்ல ஸ்விங், நல்ல பவுன்சர், நல்ல யார்க்கர், நல்ல வேகம் என்று ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் உலகில் வலம் வருகிறார். இந்த இளம் வயதில் இவரது வேகப்பந்து வீச்சு திறமை, பல பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியோடு மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இவரது பந்துவீச்சுதான். கேஎல் ராகுல் ரோஹித் சர்மா இருவரையும் ஆரம்பத்திலேயே ஸ்டம்புகள் சிதற வழி அனுப்பி வைத்தார். கடைசியில் நன்றாக விளையாடிய விராட் கோலியையும் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி மிக எளிதாக பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

ஆசிய கோப்பைக்கு முன்பு பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது பீல்டிங் செய்வதில் முழங்காலில் இவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவரை மருத்துவ பரிசோதனை செய்த பொழுது, இவர் உலகத் கோப்பை வரை விளையாட முடியாது என்று தெரிய வந்தது.

இதனை அடுத்து இவர் அதற்கான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆசிய கோப்பையில் அணியோடு தொடர்ந்து இருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவரது காயம் குறித்து தெரிவிக்கையில், அவருக்குத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகக் கூறியது.

ஆனால் தற்போது இவர் காயம்பட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று, இவரது சொந்த மாமாவான சாகித் அப்ரிடி தெரிவித்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறார்.

இதுகுறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் ” ஷாகின் தன் சொந்த செலவில் இங்கிலாந்து சென்று தன் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டார். நான் அவருக்கு இங்கிலாந்தில் ஒரு மருத்துவரை அறிமுகப்படுத்தினேன். அவர் அந்த மருத்துவரைத் தொடர்பு கொண்டார். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை ” என்று கூறியிருக்கிறார்.

ஆசிய கோப்பையின் போது கேப்டன் பாபருக்காக அணியோடு இருந்த ஷாகின் காயம் பற்றி பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகி, அவரை முழுவதுமாக கண்காணித்து வருவதாகவும், அவர் மிக முக்கிய வீரர் என்றும் தெரிவித்து இருந்ததற்கு மாற்றாக இப்பொழுது ஷாகித் அப்ரிடி தெரிவித்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் தாண்டி வெளியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.