ரோஹித் ஷர்மா & ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி ஷாஹீன் அப்ரிடி புதிய உலக சாதனை

0
896
Shaheen Afridi beats Steve Smith and Rohit Sharma Record

2022ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இறுதிப் போட்டியில் லாகூர் க்வாலான்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான் அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. லாகூர் அணியில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய முல்தான் அணி கடைசி ஓவரில் (19.3 ஆவது ஒவரில் ) 10 விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே குவித்தது. போட்டியின் முடிவில் 42 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வரலாற்றில் முதல் முறையாக லாகூர் அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் ஐந்து சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத லாகூர் அணி 2020ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ரன்னர் அப் பட்டத்தை வென்றது. முந்தைய தொடரில் ரன்னர் அப் பட்டத்தை வென்ற லாகூர் அணி இந்த ஆண்டு தொடரை கைப்பற்றி கோப்பையை வென்று தன் கோப்பை தாகத்தை தீர்த்துள்ளது.

21 வயதில் புதிய சாதனை படைத்துள்ள ஷாஹீன் ஷா அப்ரிடி

இளம் வீரராக ஒரு அணியை தலைமை தாங்கி கோப்பையை வென்ற கேப்டனாக முதலிடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். 2012ஆம் ஆண்டு நடந்த பிக் பேஷ் லீக் தொடரை சிட்னி சிக்ஸர்ஸ் அணி கைப்பற்றியது. அந்த ஆண்டு சிட்னி அணியை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கினார். 22 வயதான அவர் மிகச் சிறப்பாக தனது அணியை வழிநடத்தி கோப்பையை பெற்றுத்தந்தார்.

2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது நம் அனைவருக்கும் தெரியும். 26 வயதான இந்திய வீரர் ரோஹித் ஷர்மா மும்பை அணியை சிறப்பாக வழிநடத்தி அந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை மும்பை அணிக்கு பெற்றுத் தந்தார்.

ஆனால் 21 வயதிலேயே தற்பொழுது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஷாஹீன் ஷா அப்ரிடி தனது அணியான லாகூர் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை பெற்று தந்திருக்கிறார். இதன் காரணமாக மிக இளம் வயதிலேயே ஒரு அணியை வழிநடத்தி கோப்பையை வென்ற வீரராக ஷாஹீன் ஷா அப்ரிடி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இது சம்பந்தமாக பேசியவர் தனது அணி வீரர்கள் அனைவரும் மிக சிறப்பாக தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விளையாடினார்கள் என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து இறுதிப் போட்டியில் எங்களுக்குப் போதுமான பேராதரவை கொடுத்தனர். அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் அணியில் சீனியர் வீரரான முகமது ஹபீஸ் தனக்கு தேவைப்பட்ட நேரத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். இறுதியாக 6 வருட காத்திருப்பு இறுதியில் நிறைவேறி உள்ளது என்று சந்தோஷத்துடன் கூறி முடித்தார்.