ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்; இந்த அணிக்கு பெருத்த பின்னடைவு! – உண்மை காரணம் இதுதான்!

0
1277

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக செயல்பட்டவர் பாகிஸ்தானியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி. அடுத்தடுத்த தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துவந்த இவர், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித பார்மட்டிலும் அந்த அணியின் முன்னணி வீரராக உருவெடுத்தார்.

- Advertisement -

கடந்த ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த தொடரின்போது, சாஹின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சாஹின், மெல்ல மெல்ல குணமடைந்து வந்தார். நெதர்லாந்து சென்று ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இவரால் விளையாட முடியாமல் போனது. ஆனால் இவரது உடல் சிகிச்சைக்காகவும் பயிற்சிக்காகவும் பாகிஸ்தான் அணியுடன் பயணித்தார்.

நெதர்லாந்தில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவருடன் பிசியோதெரபிஸ்ட் உட்பட வேறு சில மருத்துவ நிபுணர்கள் இருந்தனர். அச்சமயம் சாஹின் முழுமையாக குணமடையவில்லை, மேலும் சில வாரங்கள் தேவைப்படுகிறது என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் ஆசிய கோப்பை தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் இரண்டிலும் இவரால் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு சில வாரம் முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் விளையாடும் தொடரின்போது, இவர் பாகிஸ்தான் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு சரியாக 16 நாட்கள் முன்பு அக்டோபர் 7ஆம் தேதி இந்த தொடர் துவங்குகிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடர் துவங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இவர் இப்படி காயத்தில் இருப்பது பாகிஸ்தான் அணிக்கு பெருத்த பின்னடைவை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாஹின் உடல்நிலை குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகளில், “சாஹின் உடல்நிலை குறித்து நான் அவரிடம் கூறுகையில் மிகவும் கடினமானதாக உணர்ந்தார். நெதர்லாந்தில் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு இன்னும் சில வாரங்கள் குணமடைவதற்கு தேவை என்பதை உணர்ந்தோம். சாஹின் மிகவும் மன உறுதியான இளம் வீரர். இதனை புரிந்துகொண்டு விரைவில் குணமடைவதற்கு அவர் உடல் அளவிலும் மனதளவிலும் நம்பிக்கையாக இருக்கிறார்.” என்று பேசினார்.

சாஹின் அப்ரிடிக்கு மாற்று வீரராக யார் இருப்பார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். ஆசிய கோப்பைத் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்குகிறது. மேலும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர் செப்டம்பர் 20ஆம் தேதி துவங்குகிறது.