உம்ரான் மாலிக்கின் வேகம் குறித்த கேள்விக்கு எதிர்பாராத விதமாக பதிலளித்த ஷாஹீன் அப்ரிடி

0
541
Afridi and Umran Malik

ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் என்று எடுத்துக்கொண்டால் வேகப்பந்து வீச்சின் கூர்மை சில காலங்களுக்கு முன்புவரை மழுங்கியே இருந்தது ஆனால் அந்தக் காலக்கட்டத்திலும் கூட ஸ்விங் மற்றும் வேகத்தில் உலக கிரிக்கெட்டை மிரட்டக்கூடிய வகையில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சோயிப் அக்தர், முகம்மத் ஆசிப் போன்ற வீரர்களை பாகிஸ்தான் உருவாக்கியிருந்தது.

தற்போது இந்த வரிசையில் பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பவர்தான் 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளார் ஷாகின் ஷா அப்ரிடி. இடக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர், மணிக்கு 140கி.மீ வேகத்தில் வீசுவதோடு வெள்ளைப்பந்திலும் இருபுறமும் ஸ்விங்கும் செய்கிறார், துல்லியமான யார்க்கர்களும் வீசுகிறார். யு.ஏ.இ-ல் கடந்த வருடம் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா முதல் சுற்றோடு வெளியேறியதற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம்.

- Advertisement -

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட்இன்டீஸ் அணி பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. ஆனால் கோவிட் பரவல் காரணமாக அந்தத் தொடர் தள்ளிப் போடப்பட்டு, வரும் 8ஆம் தேதி முல்தானில் முதல் போட்டி ஆரம்பிக்கிறது.

இதுசம்பந்தமாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஷாகின் ஷாஅப்ரிடி “வானிலை வெப்பமாக உள்ளது. ஆனால் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட எதிர்நோக்குகிறோம். கோடையில் நீண்ட ஸ்பெல்கள் வீசுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கடினமான ஒன்றுதான். ஆனால் ஒரு தொழில்முறை வீரராக அந்தச் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். உலகக்கோப்பை தகுதிக்கு இந்த ஆட்டங்கள் மிக முக்கியமானது. அதனால் நாங்கள் எந்தப் போட்டியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை. மேலும் வெஸ்ட் இன்டீஸ் ஒரு பலமான சர்வதேச அணியாகும். அவர்கள் அன்டர் 19 அணியையும் இங்கு அனுப்பவில்லை” என்று கூறினார்.

மேலும் அவரிடம் ஐ.பி.எல் தொடரில் உம்ரான் மாலிக், லோக்கி பெர்குசன் இருவரும் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசுவது பற்றிக் கேட்ட பொழுது, அவர் “உங்களிடம் லைன் அன்ட் லென்த் மற்றும் ஸ்விங் இல்லாவிட்டால் உங்களுக்கு உங்களின் வேகம் உதவாது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -