கடைசி வரை ஒற்றை ஆளாக நின்று போராடிய தமிழ் பையன் வாஷி.,; ஷ்ரேயாஸ் ஐயர் ஆறுதல் பேட்டிங்! இந்தியாவை ஆல்-அவுட் செய்தது நியூசிலாந்து!

0
1045

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 219 ரன்களுக்குள் சுருட்டி உள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதி வரும் மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

களமிறங்கிய இந்திய அணிக்கு நன்றாக துவங்கினார் ஷிகர் தவான். சுப்மன் கில் இப்போட்டியில் சற்று தடுமாற்றம் கண்டார்.

கில் 13 ரன்களுக்கும் ஷிகர் தவான் 28 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். அடுத்ததாக உள்ளே வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தனது நல்ல பார்மை மீண்டும் தொடர்ந்தார். இவருக்கு பக்கபலமாக அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இல்லை.

ரிஷப் பன்ட் 10 ரன்கள், சூரியகுமார் யாதவ் 6 ரன்கள், தீபக் ஹூடா 12 ரன்கள் என சொற்ப ரன்களுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான கேமியோ கொடுத்த வாஷிங்டன் சுந்தர், இம்முறை போட்டியின் சூழல் அறிந்து நிதானமாக விளையாடினார்.

ஒருமுனையில் இவர் நிலைத்து ஆடி வந்தாலும் மறுமுனையில் வந்த வீரர்கள் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினர். துரதிஷ்டவசமாக ஷ்ரேயாஸ் 59 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் நழுவுவிட்டு ஆட்டம் இழந்தார்.

தீபச் சகர்(12) வந்தவுடன் அதிரடியாக இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அதன் பிறகு அவசரப்பட்டு அவுட் ஆகினார். கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 64 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் 5 பவுண்டர்கள் ஒரு சிக்சர் அடங்கும்.

47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆடம் மில்னே மற்றும் டேரல் மிச்சல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், டிம் சவுதி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.