“சாதிச்சிட்ட சயின்டிஸ்ட்” – அஸ்வினை வித்தியாசமாக புகழ்ந்த சேவாக்!

0
901
ashin

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார் அஸ்வின். இருவரும் அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அஸ்வின் 42 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது பந்து வீச்சிலும் இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுவதைப் போல் இருந்தது ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வினின் அபாரமான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அஸ்வினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் அஸ்வினை விஞ்ஞானி என்று கூறி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேவாக் “சயின்டிஸ்ட் அருமையாக விளையாடினீர்கள். ஸ்ரேயாஸ் ஐயர் உடன் உங்களது பார்ட்னர்ஷிப் மிகவும் அருமையாக இருந்தது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுடன் அவர் அஸ்வினின் புகைப்படத்தையும் ஒரு சயின்டிஸ்ட் போலவே வடிவமைத்து பதிவிட்டு இருந்தது. இணையதள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கேப்டன்கள் வரிசையில் கே எல் ராகுல் தன்னையும் இணைத்துக் கொண்டார்.