கங்குலி, தோனி – இந்த இருவரில் சிறந்த கேப்டன் இவர் தான் – சேவாக் கூறிய அந்த சிறந்த கேப்டன் யார் தெரியுமா ?

0
3123

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக். அத்தனை பந்து வீச்சாளர்களும் பயந்து போகும் அளவிற்கு தனது அதிரடி ஆட்டத்தால் துவக்க ஆட்டம் என்கிற விஷயத்தையே முற்றிலுமாக புரட்டிப் போட்டவர் சேவாக். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து வைத்து மந்தமான டெஸ்ட் கிரிக்கெட்டின் பக்கம் ரசிகர்களை இழுத்துக் கொண்டு வந்தவர் சேவாக் தான். இந்திய அணி வெற்றி வாகை சூடிய 2011 உலக கோப்பை தொடரில் வரிசையாக நான்கு ஆட்டங்களில் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றிகரமாக அந்த தொடரை ஆரம்பித்தவர் சேவாக். இதுவரை 104 டெஸ்ட் போட்டிகள், 19 டி20 போட்டிகள், 252 ஒருநாள் போட்டிகள் என்று அனைத்து ஃபார்மட்டிலும் தனது அதிரடி அவதாரத்தை காட்டியவர்.

தோனி கங்குலி என்று இரண்டு முக்கியமான கேப்டன்களுக்கு கீழேயும் சேவாக் விளையாடி உள்ளார். இந்த இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார் சேவாக். ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தோனியை விட கங்குலி தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார் சேவாக். இருவருமே சிறந்த கேப்டன்கள் என்றாலும் தோனியை விட கங்குலி ஒரு படி மேலானவர் என்றும் கூறியுள்ளார். மேலும் கங்குலி வடிவமைத்துக் கொடுத்த அதே அணியை வழிநடத்திய தான் தோனி அதிர்ஷ்டசாலி என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

கங்குலி தான் மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை மீட்டு கொடுத்ததாகவும், வெளிநாடுகளுக்குச் சென்று எப்படி ஆட்டங்களை வெல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுத்ததாகக் கூறியுள்ளார் சேவாக். மேலும் பேசிய சேவாக் 2008ஆம் ஆண்டு தான் 199 ரன்களில் இருந்தபோது மறுபுறம் இஷாந்த் சர்மா ஆடிக்கொண்டு இருந்ததால் தான் ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஒருவேளை பவுண்டரி அடித்திருந்தால் அடுத்த ஓவர் முழுதும் இசாந்த் சர்மா எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்றும் கூறினார்.

மேலும் இந்த அதிரடி வீரருக்கு மொகாலி மைதானம் தான் மிகவும் பிடித்தமான மைதானமாம். எளிதாக ரன்கள் எடுக்க முடியுமென்றும் அவுட்டானால் கூட அங்கிருக்கும் அருமையான சோபாக்களில் சென்று இளைப்பாற முடியும் என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார். வெளிநாட்டு மைதானங்களில் மெல்போர்ன் மைதானம் தான் விளையாடுவதற்கு சிறப்பாக இருக்கும் என்றும், அங்கு உள்ள உணவுகளும் அருமையாக இருக்கும் என்றும் சேவாக் பிரத்தியேகமாக கூறியுள்ளார்.