வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஸ்காட்லாந்து ; இந்திய அணி குழுவில் இருந்து வெளியேறும் வெஸ்ட் இண்டீஸ்? காரணம் என்ன!

0
6765
T20iwc2022

எட்டாவது உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகள் நேற்று துவங்கி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்றைய தகுதி சுற்றுப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி நபியா அதிர்ச்சியளித்தது. யுஏஇ அணியை நெதர்லாந்து வீழ்த்தியது!

இன்று பி பிரிவின் தகுதி சுற்றுப் போட்டியில் பலமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய அணியான ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

களமிறங்கிய ஸ்காட்லாந்து துவக்க வீரர்கள் விக்கெட் இழக்காமல் அரைசத பார்ட்னர்ஷிப் அளித்தார்கள். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இவருக்கு அடுத்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் 23 ரன்கள்தான். 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் தந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடர்ந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி மட்டுமே கிடைத்தது. அந்த அணியில் எந்த பேட்ஸ்மேன்களுமே நிலைத்து நின்று விளையாட வில்லை. வருவதும் போவதுமாக பொறுப்பற்று விளையாடினார்கள்.

- Advertisement -

இறுதிநேரத்தில் வழக்கம்போல் ஜேசன் ஹோல்டர் மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடித்து 33 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 18.3 ஓவர்களில் 118 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்று உள்ளது. இந்தப் பிரிவிற்கு இரண்டு அணிகள் தகுதி சுற்றின் மூலம் வரும். அதாவது தகுதி சுற்றில் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் ஏ2 அணியும், பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் பி1 அணியும் இந்திய அணி இடம் பெற்றிருக்கும் பிரதான சுற்றுக் குழுவான பி பிரிவில் இடம் பிடிக்கும்.

இப்படி இந்திய அணியின் பிரிவில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்டது தகுதி சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியைத்தான். தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்து இருப்பதால் தன்னுடைய குழுவில் அதாவது பி குழுவில் முதல் இடம் பிடிப்பது கடினம். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில் இடம் பெறாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயத்தில் தகுதி சுற்று குழு ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிதான் இந்திய குழுவில் இடம்பெறும். இந்த வகையில் நேற்று நமிபியா அணியிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி இந்திய குழுவில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியை சந்திக்கிறது. அதேபோல் இலங்கை அணி நெதர்லாந்து மற்றும் யுஏஇ அணியை சந்திக்கிறது. இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தாங்கள் அடுத்து சந்திக்கும் இரண்டு போட்டியில் ஒரு போட்டியைத் தோற்றாலும் உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்குள் நுழையாமல் இங்கிருந்தே வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.