அடித்தது 399 ரன்.. ஜெயித்தது 309 ரன்.. நெதர்லாந்தை புரட்டி எடுத்த ஆஸி.. உலக சாதனைகளுடன் கம்பேக்.. புள்ளி பட்டியலில் வலிமையான இடம்!

0
425
Australia

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று டெல்லி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை சாதனையுடன் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு மேக்ஸ்வெல் 106 (44), டேவிட் வார்னர் 104 (93), ஸ்மித் 71 (68), லபுசேன் 62 (47) என ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 399 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய ஆறாவது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை சச்சின் டெண்டுல்கர் உடன் பகிர்ந்திருக்கிறார். ஏழு சதங்களுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

மேலும் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் 40 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து, குறைந்த பந்துகளில் அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் என்கின்ற உலகக் கோப்பை உலகச் சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்த தொடரில் 49 பந்துகளில் மார்க்ரம் அடித்திருந்த அதிவேக சத சாதனை உடைந்திருக்கிறது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்து அணிக்கு பந்துவீச்சில் ஏற்பட்ட அதிர்ச்சியை விட பேட்டிங்கில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்து மிகப்பெரிய மோசமான சாதனைக்கு சொந்தக்கார அணியாக மாறியது.

- Advertisement -

நெதர்லாந்து அணி ஒட்டுமொத்தமாக 21 ஓவர்களில் 90 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் விக்ரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக பதிவாகியது. ஆஸ்திரேலியா தரப்பில் எட்டு ரன்கள் தந்து ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்கின்ற சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்திருக்கிறது. நடப்பு உலகக் கோப்பையை சரியாக ஆரம்பிக்காத ஆஸ்திரேலிய அணி, தற்பொழுது தன்னுடைய வழக்கமான பாதைக்கு திரும்பி இருக்கிறது.

இந்த மோசமான தோல்வியின் காரணமாக தற்பொழுது நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் பங்களாதேஷ் எட்டாவது இடத்திற்கு இங்கிலாந்து வந்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணி நல்ல ரன் ரேட் உடன் 6 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது!