சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் விளையாடினால் பணம் கிடைக்கும் ; ஆனால் இதைச் செய்தால் தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் – ஸ்ரீசாந்த் அதிரடி கருத்து!

0
1317
Sanju samson

தென்னிந்தியாவில் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்களில் தற்போது அதிக அளவு ரசிகர்களைக் கொண்டிருக்கக்கூடிய வீரர் என்றால், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்தான்!

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் எப்படியும் சஞ்சு சாம்சனுக்கு 15 பேர் கொண்ட இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். மேலும் அப்படி இடம் கிடைக்கும் என்றும் தகவல்கள் கசிந்து இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக மட்டும் இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் இவர் தேர்வாகவில்லை.

மேலும் ஐபிஎல் தொடரில் இவர் தனது அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக இருந்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருந்தபோதும், அதற்கடுத்து இந்தியாவில் நடந்த ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே சமயத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

அதற்கு அடுத்து அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக நடந்த 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்திலும் மிகச் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். ஆனால் அதற்குப்பிறகு இங்கிலாந்து அணியுடன் நடந்த எந்த போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்
கே எல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறியதால், இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுதும் ஒருநாள் போட்டி தொடரில் மட்டுமே விளையாடினார்.

இதை அடுத்து சஞ்சு சாம்சன் இந்திய அணிக்குள் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீசாந்த் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறும்போது
” சஞ்சு சாம்சன் சீராக இருக்கவேண்டும். எல்லோரும் ஐபிஎல் பற்றி பேசுகிறார்கள். நான் கேரளாவை சேர்ந்தவன். நான் எப்பொழுதும் அவருக்கு ஆதரவாக இருப்பேன். அவர் 14 வயதுக்கு உட்பட்ட அவர்களுக்கான அணியில் விளையாடும் பொழுது நான் அவரை பார்த்து இருக்கிறேன். மேலும் அவர் எனது தலைமையின் கீழும் விளையாடி இருக்கிறார். அவரது ரஞ்சி கோப்பை அறிமுகப் போட்டியில் அவருக்கு தொப்பி வழங்கியது நான்தான். நான் அவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும், அவர் தனது கேரள மாநில அணிக்காக மீண்டும் முதல் தர போட்டிகளில் விளையாட வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் இதை விளக்கமாக பேசிய ஸ்ரீசாந்த் ” கேரளாவில் சஞ்சு சாம்சன் மட்டும்தான் கிரிக்கெட் வீரரா என்றால் கிடையாது. நிறைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். இது ஒரு நேரம். அதற்கு அவர் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், கே எல் ராகுல், இஷான் கிஷான் ஆகியோரை வைத்துக் கொள்ள முடியும். நான் சொல்கிறேன் இந்திய அணியில் நிறைய விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள் சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை ” என்றவர்…

மேலும் தொடர்ந்து பேசினார் ” நான் அவரிடமும் இதைச் சொன்னேன். அவர் மீண்டும் கேரள கிரிக்கெட்டுக்கு திரும்பி, கேரள அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் கேரளா அணியின் கேப்டனும் கூட. அவர் மூன்று ஆண்டுகளில் எந்த சதமும் அடிக்கவில்லை. அவர் மூன்று ஆண்டுகளாக கேரளாவுக்கு விளையாடவில்லை. ஆனால் அவர் திரும்பி வந்தால் நிச்சயம் சதங்கள் அடிப்பார். ரிஷப் பண்ட், இசான் கிசான் அணிக்குள் எப்படி வந்தார்கள் என்று பார்க்கவேண்டும். அதுபோல இவரும் இந்திய அணிக்குள் வரவேண்டும். சஞ்சு சாம்சன் திறமையும் தரமும் கொண்ட வீரர். ஆனால் இது நிலைத்தன்மை சம்பந்தப்பட்ட விஷயம் “என்று விரிவாக தெரிவித்திருக்கிறார்.