இந்திய அணியின் துணை கேப்டனாகிறார் சஞ்சு சாம்சன்!

0
6077

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் சஞ்சு சாம்சன்.

டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டனர். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க வீரர்கள் திருவனந்தபுரம் மைதானத்திற்கு வந்திறங்கி தங்களது பயிற்சிகளை துவங்கிவிட்டனர்.

முதல் கட்டமாக மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் நான்காம் தேதி வரை டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்திய அணி வீரர்கள் டி20 உலக கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா செல்கின்றனர். 15 வீரர்கள் மற்றும் நான்கு ரிசர்வ் வீரர்கள் என 19 பேர் ஆஸ்திரேலியா சென்ற பிறகு, இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா ஏ அணியில் இருக்கும் முன்னணி வீரர்கள் மற்றும் சில இளம் வீரர்கள் சேர்ந்த இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

தற்போது நியூசிலாந்து ஏ அணியுடன் விளையாடி வரும் இந்தியா ஏ அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார். அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் டி20 தொடர் முடிந்த பிறகு வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இவரை நியமிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.