ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் பயிற்சியாளர் குமார் சங்ககாரா பற்றி மனம் திறந்த சஞ்சு சாம்சன் !

0
202

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி தொடர்கள் 31 தேதி குஜராத் மாநில அகமதாபாத்தில் வைத்து தொடங்க இருக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது . இதன் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியினரும் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணியினரும் மோத உள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும். இந்தப் போட்டிகளில் சர்வதேச வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சர்வதேச கிரிக்கட் லீக் போட்டிகளிலேயே மிகச் சிறந்ததும் மிகப் பிரம்மாண்டமானது ஐபிஎல் தொடர்களாகும்.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தொடங்க இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்ட போது ஆஸ்திரேலியா லெஜன்ட் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு 14 வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அந்த அணி . ஆயினும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தன்னுடைய பயணம் பற்றியும் கடந்த வருடத்தின் சிறப்பான ஆட்டம் பற்றியும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். இது பற்றி பேசி இருக்கும் சாம்சன் ” நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையும் போது எனது வயது 18. தற்போது எனது வயது 28 கடந்த 10 வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இது மிகவும் உற்சாகமான மற்றும் சவால் நிறைந்த ஒரு பயணம். ராஜஸ்தான் ராயல்ஸ் டீம் எப்போதும் சிறப்பாக செயல்படுவதையே நான் பார்க்க விரும்புகிறேன். கடந்த வருடம் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியை எட்டியதால் இந்த வருடமும் எங்கள் மீதான அழுத்தம் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளைப் போலவே சிறப்பாக ஆட முயற்சி செய்வோம்” எனக் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய சாம்சன் ” சங்ககாரா எங்களுக்கு பயிற்சியாளராக கிடைத்தது உண்மையிலேயே நாங்கள் செய்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் . அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். பயிற்சியின் போதும் ட்ரெஸ்ஸிங் ரூமிலும் அவர் எங்களுடன் இருப்பது அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைகிறது. அவருடைய பரந்த அனுபவத்தால் அணியின் திறனை எப்போதும் மேம்படுத்துவதிலும் அணிக்கான யுக்திகளை யோசிப்பதிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் ” என கூறினார் . ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ஏப்ரல் இரண்டாம் தேதி மோத இருக்கிறது ..

- Advertisement -