சிக்ஸர் அடித்து ஸ்டைலாக ஆட்டத்தை முடித்த சஞ்சு சாம்சன்; ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி! சஞ்சு சாம்சன், ஷ்ரதுல் தாக்கூர் அசத்தல்

0
270

இரண்டாவது ஒருநாள் போட்டியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இரு அணிகள் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 ரன்கள் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பார்ல் 39 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் இடம் பெற்றிருந்த தாக்கூர் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நட்சத்திர வீரர் ராசா 16 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

38.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 161 ரன்கள் மட்டுமே அடித்திருந்தத. இப்போட்டியில் தவானுடன் சேர்ந்து கேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கி, ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் வந்த கில் மற்றும் தவான் இருவரும் தலா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா நல்ல பங்களிப்பை கொடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து கொடுத்தார். இவர் 39 பந்துகளில் 43 ரன்கள் அடித்திருந்தார். அதில் நான்கு சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடங்கும்

25.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. கீப்பிங்கில் மூன்று கேட்ச், பேட்டிங்கில் 43 ரன்கள் என இரண்டிலும் அசத்திய சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சாம்சன் கூறுகையில், “மிடில் ஓவர்களில் நீங்கள் எவ்வளவு நேரம் மைதானத்தில் இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு நல்ல மனநிலையை கொடுக்கும். இன்றைய போட்டியில் எனக்கு அது சிறப்பாக அமைந்தது. மூன்று கேட்ச் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு ஸ்டம்பிங் தவறவிட்டது சற்று வருத்தமாக இருக்கிறது. இன்றைய போட்டியில் கீப்பிங் மற்றும் பவுலிங் இரண்டையும் மகிழ்ச்சியோடு செய்தேன். இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். சிறு தவறும் சொல்ல முடியாத அளவிற்கு இன்று அபாரமாக செயல்பட்டனர்.” என்றார்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பேசியதாவது: தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி நன்றாக போராடினோம். சென்ற போட்டியில் விக்கெட் வீழ்த்துவதற்கு நாங்கள் திணறினோம். ஆனால் இப்போது நன்றாக பந்துவீசினோம். அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி. இன்னும் 20-30 ரன்கள் இருந்திருந்தால் நிச்சயம் போட்டியை நெருக்கமாக எடுத்துச் சென்றிருப்போம். நாங்கள் இம்முறை எளிதாக விட்டுக் கொடுக்கவில்லை. பவுலர்கள் அபாரமாக பந்துவீசி பெருமிதம் சேர்த்து விட்டனர்.” என்றார்.