” அவருக்கு தீராதப் பசி ; ஐ.பி.எலுக்கு பின் ஓய்வு எடுக்காமல் மதுரை சென்று விளையாடினார் ” – தினேஷ் கார்த்திக்கின் கடும் உழைப்பை விவரிக்கும் சஞ்சய் பாங்கர்

0
361
Sanjay Bangar about Dinesh Karthik

இன்று இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் வரை தினேஷ் கார்த்திக் பேசுப்பொருளாய் மாறி இருக்கிறார். தற்போது அவரைக் குறித்தான விவாதங்களும், கருத்துக்களும்தான் அதிகளவில் வெளி வருகின்றன!

இந்திய முன்னாள் வீரர் கம்பீர் தினேஷ் கார்த்திக் வருகின்ற டி20 உலகக்கோப்பையில் இடம்பெற மாட்டார் என்கிறார். ஆஸ்திரேலிய லெஜன்ட் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்கும், தென் ஆப்பிரிக்க லெஜன்ட் பாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெயினும் தினேஷ் கார்த்திக் கட்டாயம் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்கிறார்கள். இப்படி தினேஷ் கார்த்திக் குறித்தான பேச்சுகள்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சமீபத்தில் அதிகம் உலா வருகின்றன!

- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் சீசன் மெகா ஏலத்தில் 5.50 கோடிக்கு பெங்களூர் அணியால் தினேஷ் கார்த்திக் வாங்கப்பட்டார். இந்தத் தொடரில் பேட்டிங்கில் பினிசிங் ரோலில் 16 ஆட்டங்களில் 330 ரன்களை 183 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாய் குவித்தார். பெங்களூர் அணி ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்ததிற்கு மிக முக்கியக் காரணமாகத் தினேஷ் கார்த்திக் விளங்கினார்.

இதன் மூலம் ஐ.பி.எல் தொடர் முடிந்து தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெறும் டி20 தொடரில் வாய்ப்பைப் பெற்று, இதிலும் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்தத் தொடரில் நடந்து முடிந்த நான்காவது போட்டியில், 27 பந்துகளில் 55 ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றிபெற முக்கியக் காரணமாக இருந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

தினேஷ் கார்த்திக் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும், ஆர்.சி.பி அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சை பாங்கர் சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “அவருக்குப் பசி இருக்கிறது. அவர் ஐ.பி.எல் முடிந்தும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் அதிகம் பங்கேற்று விளையாடினார். இதற்குப் பிறகு மதுரை வரை சென்று சிறிய போட்டிகளிலும் விளையாடினார். இதையெல்லாம் பயிற்சிகாகப் பயன்படுத்தினார். அவர் தற்போது தனது கடின உழைப்பிற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணிக்குத் திரும்புவதற்காக இவ்வளவு உழைப்பு, துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதின் மூலம் அவர் ஒரு தரத்தை அமைத்துள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சஞ்சை பாங்கர் “பல நேரங்களில் புள்ளி விபரங்கள் தவறாகவே வழிநடத்தும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வின், சாஹல் பந்துவீசியது எனக்கு நினைவிருக்கிறது. புள்ளி விபரங்கள் தினேஷ் கார்த்திக் சுழலுக்கு எதிராக பலமாக இல்லையென்று காட்டியது. ஆனால் அந்த ஆட்டத்தில் அதைத் தவறு என்று அவர் நிரூபித்தார். முந்தைய சீசனுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு, அவர் நேர்மறையான எண்ணத்தோடு விளையாடியதுதான். அவர் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள விரும்பினார். நீங்கள் கவனித்திருப்பிர்கள், அவர் ஸ்பின்னுக்கு எதிராக ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் ஷாட்ஸ்களை முயற்சித்து சிறப்பாக ஆடியதை” என்று கூறினார்!