முதல் முறையாக இந்த தமிழக வீரரை ஆதரித்து பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர்!

0
96
Sanjay manjrekar

இந்திய அணி அடுத்த இரு மாதங்களில் பங்கேற்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக பல்வேறு பரிசோதனைகளை முயற்சிகளைச் செய்து வருகிறது. ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் கூட்டணி பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என எல்லாப் பக்கங்களிலும் ஒரு சிறந்த அணியைக் கண்டறிய சிறப்பான திட்டங்களோடும் பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது!

பேட்டிங்கில் இங்கிலாந்து தொடரில் ரிஷாப் பண்ட்டை துவக்க வீரராகக் கொண்டுவந்து பரிசோதித்து அடுத்து உடனே வெஸ்ட்இன்டீஸ் தொடரில் சூர்யகுமாரை துவக்க வீரராகக் களமிறக்கி பரிசோதித்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

பவுலிங்கில் மிடில் அன்ட் டெத் ஓவர்களுக்காக ஹர்சல் படேலை வைத்திருந்து, தற்போது அந்த இடத்தில் அர்ஷ்தீப் சிங்கை வைத்துப் பரிசோதித்து அதிலும் வெற்றிக் காணப்பட்டு இருக்கிறது. பும்ரா-புவி-அர்ஷ்தீப்-ஹர்திக் என வலிமையான வேகப்பந்து வீச்சு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது!

பந்துவீச்சில் சுழற்பந்தில் யுஸ்வேந்திர சாஹல் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது உறுதி என்ற நிலையில், வெஸ்ட்இன்டீஸ் தொடரில் அவர் அணியில் இருந்தாலும், ஜடேஜா, பிஷ்னோய், அக்சர் என முயற்சிப்பதோடு, எட்டு மாதங்களுக்குப் பிறகு மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை கொண்டுவந்து வாய்ப்பு தந்திருக்கிறார்கள். இது பலருக்கும் குழப்பத்தைத் தந்திருந்தாலும், அஷ்வின் மிகச்சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்!

தற்போது டி20 உலகக்கோப்பைக்கு யார் சரியான சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் என்பதில், தமிழக வீரர் அஷ்வினை ஆதரித்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளருமாக உள்ள சஞ்சய் மஞ்ரேக்கர்!

அவர் இதுபற்றி கூறியுள்ளதாவது “சாஹல் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருக்கும் போது அவருடன் நான் அஷ்வின் இருப்பதை விரும்புவேன். சாஹல் விக்கெட் தேடுதலில் ஈடுபடுவதால் அந்தப் பொறுப்பு அஷ்வினுக்கு கிடையாது. டி20 கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களின் பொறுப்பு மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதுதான். ஷம்சி, கேசவ் மகராஜ் இதை செளத்ஆப்பிரிக்கா அணிக்காகக் கச்சிதமாகச் செய்து வருகிறார்கள்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்த இடத்தில்தான் ஒரு டி20 பவுலராக அஷ்வின் கொஞ்சம் பின்தங்குகிறார். அவர் எகானமியாகப் பந்துவீசுவதில் கவனம் செலுத்துகிறார். சாஹல் விக்கெட் தேட வீசுவதால் அஷ்வின் எகானமியாக வீசுவது இப்போது பிரச்சினை இல்லை. டி20 போட்டியில் எகானமியாக வீசுவதும் கலைதான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அஷ்வின் டி20 கிரிக்கெட்டில் மேன்பட்டு இருக்கிறார். வெஸ்ட்இன்டீஸ் தொடரில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். உலகக்கோப்பை அணியில் சாஹலோடு அஷ்வின் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்!