அயர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசை புள்ளி பட்டியலில் முன்னேறிய சாம்சன் – ஹூடா ஜோடி

0
135

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க இங்கிலாந்தில் முகாமிட்டிருக்கிறது. இதில் முதல் போட்டியாக ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5 வரை பர்மிங்ஹாமில் நடக்க இருக்கிறது.

இதற்கு இடையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான ஒரு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி, இரண்டு ஆட்டங்களோடு, தொடரையும் வென்று அசத்தி இருக்கிறது. இரண்டாவது ஆட்டத்தின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தீபக் ஹூடா தேர்ந்தெடுக்கப் பட்டார்!

- Advertisement -

இந்தத் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டி பனிரென்டு ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 108 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி 9.2 ஓவர்களின் இலக்கை எட்டி எளிதாய் வென்றது. இந்தப் போட்டியில் தீபக் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் 77 ரன்கள், தீபக் ஹூடாவின் 104 ரன் சதத்தோடு 225 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து அணியும் மிகச்சிறப்பாக விளையாடி 220 ரன்கள் எடுத்தது வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றது.

இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா மிகச்சிறப்பாக விளையாடிய காரணத்தினால் அவர்கள் டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறி, மிகச்சிறப்பான நிலையை எட்டியிருக்கிறார்கள்.

- Advertisement -

இரண்டாவது ஆட்டத்தில் வாய்ப்பு பெற்று அதிரடியாய் அரைசதமடித்த சஞ்சு சாம்சன் 57 இடங்கள் முன்னேறி 144 இடத்தைப் பிடித்திருக்கிறார். இதே ஆட்டத்தில் அதிரடியாய் சதம் விளாசிய தீபக் ஹூடா ஒரேயடியாக 414 இடங்கள் உயர்ந்து 104வது இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வீழ்த்திய ஹர்சல் படேல் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி தரவரிசைப் பட்டியலில் 37வது இடத்திலிருந்து 33வது இடத்திற்கு நகர்ந்துள்ளார்!