ஒருநாள் தொடரில் தல தோனியின் சாதனையைச் செய்த சஞ்சு சாம்சன்!

0
228

மிகக்குறைந்த வயதில் ரஞ்சி போட்டிகளில் விளையாடியவர், சதம் அடித்தவர், ஆட்ட சூழல் பற்றி எந்த கவலையும் இல்லாது மிக அதிரடியாக விளையாடக்கூடிய இளம் பேட்ஸ்மேன், எதிர்கால இந்திய அணியின் நம்பிக்கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் தொடரில் முதலில் டெல்லி அணிக்கு வந்து பின்பு ராஜஸ்தான் அணிக்குள் நுழைந்து, ராஜஸ்தான் அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கவனத்தைக் கவர்ந்து, பின்பு இளையோர் கிரிக்கெட்டில் டிராவிட் பயிற்சியின் கீழ் உருவாகி வந்தவர் சஞ்சு சாம்சன்.

- Advertisement -

இதற்குப் பிறகு படிப்படியாக உயர்ந்து ஐபிஎல் தொடரில் தற்பொழுது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை நல்ல முறையில் இருந்தாலும், இந்திய அணிக்கான இவரது சர்வதேச கிரிக்கெட் பயணம் நன்றாக அமையவில்லை. சீராக ரன் அடிக்கும் வழக்கம் இவரிடம் இல்லாததால் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இன்னொரு புறத்தில் இவர் தனது தவறை உணர்ந்து அதை சரி செய்து சரியாக ஆடும் காலத்தில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தரவில்லை. மேலும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட காலத்தில், இவருக்கு தரப்பட்ட வாய்ப்புகள் என்பது மிக மிகக் குறைவு. இது இப்பொழுது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த முறை எப்படியும் இவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பார் அல்லது ரிசர்வு வீரராக இடம் பிடிப்பார் என்று பலர் நினைத்து இருந்த பொழுது, அது நடக்கவில்லை.

- Advertisement -

ஒருபுறம் இப்படி நடந்தாலும், இன்னொருபுறம் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, இந்திய அணி விளையாடும் ஒருநாள் தொடர்களுக்கு முன்னணி நட்சத்திர வீரர்களை விளையாட வைக்காமல், ஷிகர் தவானை தலைமையாகக் கொண்டு இளம் இந்திய வீரர்களை இந்திய அணி நிர்வாகம் ஆட வைக்கிறது. இப்படியான தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும்கூட வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடரில் கே எல் ராகுல் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வெளியேறவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி என இரண்டு தொடர்களில் விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டி தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடரின் முதல் ஆட்டத்தில் மிகப் பிரமாதமாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்து, தோல்வியடைந்த இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்தார். அடுத்து 2-வது ஆட்டத்தில் மீண்டும் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் உடன் இணைந்து ஆட்டத்தை முடித்தார். இன்று தொடரின் மூன்றாவது போட்டியிலும் ஆட்டமிழக்காது இரண்டு ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இந்தவகையில் சஞ்சு சாம்சன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார். 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று ஆட்டங்களில் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் 13, 51, 23* என இருந்திருப்பார். தற்பொழுது சஞ்சு சாம்சன் தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் 86, 30, 2* இரண்டு என ஆட்டமிழக்காமல் 3 போட்டிகளிலும் இருந்திருக்கிறார்!