சமி சிராஜ் ஜடேஜா கே.எல்.ராகுல் அபார விளையாட்டு; முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!

0
458
IndvsAus

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது!

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ரோஹித் சர்மா இல்லாததால் இஷான் கிஷான் இடம் பெற்றார். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சுழற் பந்துவீச்சாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சமி, சிராஜ் உடன் ஷர்துல் தாக்கூர் இடம்பெற்றார். ஆஸ்திரேலியா அணியில் வார்னர் இடம்பெறவில்லை.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கும் முகமது சிராஜ் ஹெட் விக்கட்டை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதற்கு அடுத்து மிட்சல் மார்ஷ் – ஸ்மித் ஜோடி 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சுகு வந்து ஸ்மித்தை 22 ரன்களில் வெளியேற்றினார். இதற்கு அடுத்து மார்ஷ் – லபுஷன் ஜோடி 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சுக்கு வந்து மிட்சல் மார்சை 81 ரன்கள் வெளியேற்ற அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் சரிவு ஆரம்பித்தது. அவர் வெளியேறும் பொழுது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 129.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மேற்கொண்டு நிமிர விடாமல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி மற்றும் முகமது சிராஜ் தங்களது சிறப்பான பந்துவீச்சால் பார்த்துக் கொண்டார்கள். மேற்கொண்டு 59 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏழு விக்கட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி 188 ரன்களுக்கு சுருண்டது. சாமி மற்றும் சிராஜ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இஷான் 3, கில் 20 , விராட் கோலி 4, சூரியகுமார் சந்தித்த முதல் பந்திலேயே ரன் இல்லாமல் ஆட்டம் இழப்பு என 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து பெரிய அடியை இந்திய அணி வாங்கியது.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் பொறுப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடி 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா அதிர்ச்சி அளிக்கும் விதமாக 25 ரன்களில் வெளியேறினார்.

இதற்கடுத்து கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து மிகப் பொறுப்பாக விளையாடி. இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். இந்த ஜோடி ஆறாவது விக்கட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேஎல்.ராகுல் 75, ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது இந்திய அணி முதல் போட்டியை வென்று முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது.