இதே ஆசியகோப்பை பாகிஸ்தான் எதிரான போட்டி.. 2018ல் ஸ்ட்ரெச்சர், 2022ல் ஆட்டநாயகன்!! ஹர்திக் பாண்டியா கடந்துவந்த பாதை..

0
136

2018 ஆசியகோப்பையில் காயமடைந்த வீரர் முதல் 2022 ஆசியகோப்பையில் ஆட்டநாயகன் விருது வரை ஹர்திக் பாண்டியா கடந்துவந்த பாதை வியப்பை தந்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஹர்திக் பாண்டியா. பந்துவீச்சில் நான்கு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கில் இந்திய அணி 89 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 17 பந்துகளில் 33 ரன்கள் விலாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். குறிப்பாக கடைசி மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டபோது நான்காவது பந்தில் சிக்சர் விலாசி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டதால் ஆட்டநாயகன் விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது. தற்போது இவர் அனைவரின் கண்களுக்கும் பாண்டியா ஒரு ஹீரோவாக தெரிந்தாலும், கடந்த முறை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

2018ல் ஹர்திக் பாண்டியா நிலைமை:

- Advertisement -

2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பவுலிங் செய்துகொண்டு இருந்த ஹர்திக் பாண்டியா, 18 வது ஓவரின்போது தவறுதலாக கால்வைத்து காயத்திற்கு உள்ளானார். ஏற்கனவே அவருக்கு முதுகுப் பகுதியில் சிறிதளவில் காயம் இருந்தது. அதனை சரி செய்து கொண்டு அப்போட்டியை விளையாடினார். கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் இரண்டும் ஒன்றுசேர வந்ததால், அவரால் எழுந்து நடக்கக்கூட முடியாமல் மருத்துவர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் அவரை எடுத்துச் சென்றனர்.

அதன் பிறகு விரைவில் குணமடைந்து 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரிலும் விளையாடினார். மேலும் காயம் அதிகமானதால் 2019 ஆம் ஆண்டு இறுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பேட்டிங் மட்டுமே செய்ய முடியும், இவரது உடல் தகுதி பந்துவீசுவதற்கு ஏதுவாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். பேட்டிங் செய்ய ஏற்கனவே இந்திய அணியில் நிறைய வீரர்கள் இருக்கின்றனர் என்ற காரணத்திற்காக தொடர்ந்து இந்திய அணியில் ஒதுக்கப்பட்டு வந்தார். போதிய அளவில் இடம் கொடுக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த இவர், தொடரின் நடுவிலேயே காயம் காரணமாக வெளியேறினார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் ஒரு திருப்புமுனை:

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. 9 மாத காலம் எவ்வித கிரிக்கெட் விளையாடாமல் தொடர் பயிற்சி மற்றும் சிகிச்சையில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த ஏலத்தில் மும்பை அணியால் ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்படவில்லை. 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்கு விளையாடி வந்த இவருக்கு மீண்டும் ஒரு சோதனையாக இது அமைந்தது.

இதனால் பெரிதளவில் மனமுடைந்து போன ஹார்திக் பாண்டியா, ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, இந்த ஆண்டு புதிதாக உள்ளே வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியால் 15 கோடிக்கு எடுக்கப்பட்டார். அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருந்தார். புதிய அனுபவம் இல்லாத இவர் எப்படி கேப்டனாக சரியாக செயல்படுவார் என பலருக்கும் சந்தேகம் இருந்தது. அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி பந்துவீச்சு மற்றும் பேட்டி இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வரலாறு காணாத வகையில் பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை பெற்று தந்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டு தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்தார்.

நடைபெற்றுவரும் ஆசிய கோப்பையில் இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக, தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து இருக்கிறார். 2018ஆம் ஆண்டில் இதே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்ட ஹர்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு இதே ஆசிய கோப்பை இதே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இழந்த தனது பெயரை மீட்டெடுத்ததன் மூலம் அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் ஹீரோவாக மாறி இருக்கிறார்.

வெல்கம் பேக், ஹர்திக்!