நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் சொதப்பல்கள் குறித்து சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து சாய்ராஜ் பஹுதுலே பேசும்போது, “ஒவ்வொரு பேட்டருக்கும் அவரவர் திட்டம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். பிட்ச்சைப் பார்த்து அவர்கள் தங்கள் திட்டங்களை வகுத்திருந்தார்கள். ஆனால் ஆம், கணிப்பதில் சில தவறுகள் நடந்தன. ஒட்டுமொத்தமாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் பார்ட்னர்ஷிப்களே முக்கியம். சில வீரர்கள் அதிரடிப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று அது பலிக்கவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நிச்சயமாக இது ஒரு ஏமாற்றமளிக்கும் நாள். எங்களால் பார்ட்னர்ஷிப்களை அமைக்க முடியவில்லை. ஒவ்வொரு பேட்டருக்கும் நல்ல தொடக்கம் கிடைத்தது என்று நினைக்கிறேன், ஆனால் அந்தத் தொடக்கங்களைப் பெரிய ரன்களாக மாற்ற முடியவில்லை. இதுபோன்ற விக்கெட்டுகளில் பார்ட்னர்ஷிப்கள் மிகவும் முக்கியமானவை, அங்குதான் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது குறித்துப் பேசும்போது, “நிச்சயமாக, நாங்கள் 30 முதல் 40 ரன்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம், ஆனால் நாங்கள் கேட்ச்களைப் பிடிக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை, அது எங்களைப் பாதித்தது” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக பயிற்சி முறைகள் குறித்துப் பேசிய அவர், “ஆம், நாங்கள் கேட்ச்களைத் தவறவிட்டோம் என்பதைச் சொல்ல நான் தயங்கவில்லை. ஆனால் திரைக்குப் பின்னால் அதற்கான வேலைகள் நடந்துள்ளன. நிறைய டைரக்ட்-ஹிட் பயிற்சிகள் மற்றும் கேட்சிங் ட்ரில்ஸ் மேற்கொள்ளப்படுகின்றன. சரியான நேரத்தில் அந்தக் கேட்ச்களை நாம் பிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.